நெல்லையில் ஆறாக பாயும் அரசு மருத்துவமனை கழிவுநீர்: ரயில்நகர் பொதுமக்கள் பாதிப்பு

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவுகள் கழிவுநீர் குழாய் உடைப்பால் ஆறாக பாய்ந்து வருகின்றன. இதனால் கேன்சர் வார்டை ஒட்டி காணப்படும் ரயில் நகர் குடியிருப்புகளில் கழிவுநீர் தேங்கி வருகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவுகள் உரிய முறையில் கழிவுநீர் குழாய் மூலம் பாதாள சாக்கடையில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்ேபாது மருத்துவமனை வளாகத்தில் போடப்படும் தேவையற்ற கழிவுகளால் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சிற்சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதிலும் கேன்சர் வார்டை காணப்படும் காம்பவுன்ட் சுவர் அருகில் கழிவுநீர் குழாய் உடைந்து அப்பகுதியில் ஆறாக பாய்கிறது. ரயில் நகர் குடியிருப்புகள் பகுதியில் தேக்கமடைந்துள்ள கழிவுகள் அப்பகுதியில் கடும் துர்நாற்றத்தை உருவாக்கி வருகின்றன. மேலும் ரயில் நகர் பகுதியில் அதிக கொசுத்தொல்லையும் காணப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லூரியின் கழிவுநீர் உடைப்பு குறித்து அப்பகுதி மக்கள் அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தனியாக செயல்படுவதால், அங்குள்ள சுகாதார பணிகளை அவர்களே பராமரித்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அரசு மருத்துவமனை சார்பில் குழாய்கள் மற்றும் கழிவுநீரோடை சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினரே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசு துறைகள் பொறுப்பெடுத்து கொள்ள மறுப்பதால் கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்து வருகிறது. இந்நிலையில் ரயில்வே நகர் பகுதியில் சாக்கடை காரணமாக கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. அங்கு துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே அரசு மருத்துவமனையின் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related Stories: