‘மிஸ்’ ஆன மாட்டை கண்டறிய எல்லை தாண்டிய பிடிபட்ட சீன வீரர் சர்வதேச விதிப்படி ஒப்படைப்பு : இந்திய ராணுவம் தகவல்

புதுடெல்லி, மாடு ‘மிஸ்’ ஆனதால் எல்லை தாண்டிய பிடிபட்ட சீன வீரர் சர்வதேச விதிப்படி ஒப்படைக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே கடந்த மே மாதம் முதல் எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. பிரச்னையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தை சேர்ந்த வீரர் ஒருவர் இந்திய ராணுவத்திடம் கடந்த சில நாட்களுக்கு முன் சிக்கினார். கார்ப்பொரல் வாங் யா லோங் என்ற சீன ராணுவ வீரர் தெம்சோக் பகுதியில் பிடிபட்டார். இவரை சீன ராணுவத்திடம் ஒப்படைப்பதற்கு முன் அவரிடம் கடந்த சில நாட்களாக தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சம்பந்தப்பட்ட சீன ராணுவ வீரர் எல்லைதாண்டி இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டார். அந்த வீரரை பாதுகாப்பதற்காக உரிய மருத்துவ உதவி, ஆக்சிஜன் உதவி, உணவு, உடைகள் கொடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தது. சம்பந்தப்பட்ட வீரர் தொடர்பான விபரங்களை இந்திய ராணுவத்திடம் சீன ராணுவம் கேட்டறிந்துள்ளது. எல்லைப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த நபரின் மாடு ஒன்று காணாமல் போனதால், அதனை மீட்க சென்ற போது சீன வீரர் எல்லையை தாண்டிவிட்டதாக சீன ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய ராணுவம் சீன வீரரை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்தியா தரப்பில் வெளியிட்ட செய்தியில், ‘சர்வதேச விதிகளையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் இந்தியா மதிக்கும். அதனால், வழிதவறி வந்த வீரர் சீன எல்லையில் உள்ள அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டார். சர்வதேச விதிப்படி, ஒரு நாட்டின் வீரர் எல்லை தாண்டி வந்து சிக்கிக் கொண்டால், அவரிடம் தனிப்பட்ட விசாரணை நடத்தப்படும். முழுமையாக திருப்தி அடைந்த பிறகு, அந்த வீரர் அவரது தனது நாட்டிற்கு ஒப்படைக்கப்படுகிறார். அதன் அடிப்படையில் சீன வீரர் ஒப்படைக்கப்பட்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: