ஜெயலலிதா மரணம், கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகள் திமுக ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள்: தேனி முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ஜெயலலிதா மரணத்தின் மர்மமாக இருந்தாலும், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரமாக இருந்தாலும் அவை தி.மு.க ஆட்சியில்  சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என தேனி முன்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி வடக்கு, தெற்கு மாவட்டங்களின் சார்பில் நேற்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக  பங்கேற்று பேசியதாவது:   அமெரிக்க அதிபர் டிரம்பிற்கே கொரோனா தொற்றி விட்டது. அவரை விட பாதுகாப்பானவர்கள் யாராவது இருக்க முடியுமா?  இத்தகைய சூழ்நிலையிலும் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள்,  நிர்வாகிகள், அணிகளைச் சார்ந்தவர்கள் ஆற்றிய பணிகள்  தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கது. கொரோனா என்பது யாரையும் தொற்றும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல்  தி.மு.க. தொண்டர்கள் பணியாற்றினார்கள்.

இத்தகைய தியாகத் தொண்டர்களுக்கு தலைமை தாங்குகிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இறுமாப்புடன், தெம்புடன்  அமர்ந்திருக்கிறேன். இப்படி அ.தி.மு.க. ஆட்சி தனது சாதனைகளை வரிசைப்படுத்த முடியுமா?  ஜெயலலிதா இல்லை என்றால் எடப்பாடி  பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது. அந்த நன்றி உணர்ச்சி  அவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது. ஆறுமாத காலம் கொள்ளைகள் தொடருவதற்காகத்தான் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இருப்பதைப்  போல நடிக்கிறார்கள். பதவி போனதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுவார்கள்.

அவர்கள் எந்தத் திசைக்கு போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமாக இருந்தாலும், கொடநாடு கொலை  கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும் - அவை சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள்  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழியாக இந்த தேனி முப்பெரும் விழா  கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: