மாயார் பள்ளத்தாக்கில் வசிக்கும் ஆசிய ராஜாளி கழுகுகளின் கூடுகளை கண்டறிவதில் சிக்கல்

கூடலூர்: அழியும் நிலைக்கு சென்றுள்ள கழுகுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசும் வனத்துறையும் பல்வேறு தொண்டு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதிகளில் உள்ள மாயார் பள்ளத்தாக்கில் 6 வகையான கழுகுகள் வசித்து வருகின்றன. இதில் வெண் முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, ஆசிய ராஜாளி (கிங் வல்ச்சர்) கழுகு மற்றும் மஞ்சள் முக கழுகு ஆகியவை சீகூர் வனப் பகுதிக்கு உட்பட்ட மாயார் பள்ளத்தாக்கினை வாழ்விடமாக கொண்டுள்ளது.

வெண் முதுகு பாறு கழுகு மாயார் பள்ளத்தாக்கில் மரங்களில் கூடு கட்டி வசிக்கின்றன. இதேபோல் கருங்கழுத்து பாரு கழுகு நீலகிரி மாவட்டத்தில் எப்பநாடு,கோடநாடு, தெங்குமரஹடா பகுதியில் உள்ள கல்லம்பாளையம் ஆகிய இடங்களில் பாறைகளில் கூடு கட்டி வசிக்கின்றன.மஞ்சள் முக கழுகு பகுதிகளில் அவ்வப்போது காணப்பட்டாலும் அவற்றின் வாழ்விடம் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதிகளில் அமைந்துள்ளது. இதே போல் இமாலயன் பாறு கழுகுகள் வட நாடுகளிலிருந்து இந்த வனப்பகுதிக்கு வருவதாகவும், நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இவற்றை இப்பகுதிகளில் காணமுடியும். அதன் பின்னர் அவை திரும்பி அவற்றின் வாழ்விடங்களுக்கு சென்று விடுகின்றன. சிகப்பு நிற கழுத்தும் கருமை நிற உடலும் வயிற்றுப் பகுதியில் வெண்மை நிறமாகவும் காணப்படும் ஆசிய ராஜாளி கழுகுகள் கிங் வல்ச்சர் அல்லது செந்தலை கழுகுகள் என அழைக்கப்படுகின்றன.

இவை மாயார் பள்ளத்தாக்கில் தற்போது 8 இருப்பதை ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். இவற்றில் ஆறு பெரிய கழுகுகளும் இரண்டு சிறிய கழுகுகளும் உள்ளன. மற்ற கழுகுகளைப் போல கூட்டமாக சேர்ந்து வசிக்காமல் தனியாக வாழும் தன்மை உடையவை. கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக மாயார் பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்த கழுகுகளை ஆய்வாளர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எனினும் அவை எந்த பகுதிகளில் கூடுகட்டி உள்ளன என்பது குறித்து இதுவரை யாரும் கண்டறியவில்லை என கூறப்படுகிறது.கண்டறியப்பட்டுள்ள ஆசிய ராஜாளி கழுகுகளில் சிறிய குஞ்சு வகைகளும் இருப்பதால் அவற்றின் வாழ்விடம் மாயார் பள்ளத்தாக்கு பகுதிகளாக இருக்கலாம் என்றும் அவற்றின் கூடுகள் இந்தப் பகுதிகளை ஒட்டி எங்காவது பாதுகாப்பான இடங்களில் இருக்கலாம் என்றும், வெகு தொலைவிலிருந்து வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 2011ம் ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு கழுகுகளை மட்டுமே இப்பகுதியில் பார்க்க முடிந்தத நிலையில் தற்போது இரண்டு சிறிய கழுகுகள் உள்ளிட்ட 8 கழுகுகளை அவர்கள் அப்பகுதியில் பார்த்து பதிவு செய்துள்ளனர்.

வனப்பகுதிகளில் இறக்கும் யானை, காட்டு மாடு உள்ளிட்ட பெரிய விலங்குகளை கொத்தி அவற்றின் கனமான தோலைக் கிழித்து எடுப்பதற்கு இந்த ஆசிய ராஜாளி கழுகுகளால் மட்டுமே முடியும் என்றும், அவற்றின் நீளமான அழகுகள் கூர்மையான நகங்கள் இதற்கு பயன்படுவதாகவும், இவைதான் இறந்து போன இந்த விலங்குகளை முதன்முதலில் கூரிய அலாகால் கொத்தி நகங்களால் கிழித்து அவற்றின் இறந்த உடலைத் தின்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட இந்த ஆசிய ராஜாளி கழுகுகள் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், தற்போது மிக குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே அவை காணப்படுவதாகவும், மிக மிகக் குறைந்த அளவிலேயே அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அருளகம் பாறு கழுகு பாதுகாப்பு அமைப்பின் அமைப்பாளர் பாரதி மற்றும் ஆய்வாளர் மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: