நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவே அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்படுகிறது: பிரதமர் பேச்சு

மைசூர்: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்து கொண்டார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நாம் அடித்தளங்களை வலுவானதாக அமைத்தால் மட்டுமே எதிர்காலம் இந்தியாவிற்கானதாக இருக்க முடியும். இளம் இந்தியாவிற்கு அடுத்து வரும் 10 ஆண்டுகள் ஒரு மகத்தான வாய்ப்பை கொண்டுள்ளது. தற்போது அனைத்திலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது கடந்த காலத்தில் நடந்தது கிடையாது. கடந்த காலங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டாலும் எந்த ஒரு துறையையும் ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அவை கட்டுப்படுத்தப்பட்டன.

கடந்த 6 ஆண்டுகளில் பல துறைகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேசிய கல்வி கொள்கையானது, கல்வி துறையின் எதிர்காலத்தை உறுதி செய்கிறது. விவசாயம் தொடர்பான சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு அதிகாரத்தை வழங்குகின்றன. கடந்த 6 மாதங்களில் சீர்திருத்தங்களின் வேகம் மற்றும் நோக்கம் அதிகரித்து வருவதை நீங்கள் பார்க்கலாம். அது விவசாயம், விண்வெளி, பாதுகாப்பு, விமானத்துறை அல்லது தொழிலாளர் துறை எதுவாக இருந்தாலும் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், துறைக்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: