கெடுபிடி கட்டுப்பாடுகள் எதிரொலி: புதுவையில் மதுபார்களை திறந்தும் கூட்டமில்லை

புதுச்சேரி சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதி. இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். வார இறுதி நாட்களில் மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் (பார்கள்), ரெஸ்ட்டாரண்டுகளில் கூட்டம் அலைமோதும். சிசிடிவி கண்காணிப்பின்கீழ் அவர்கள் அமர்ந்திருப்பதால் குற்ற சம்பவங்கள் பெரியளவில் இல்லாமல் இருந்தன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியின் இன்றைய நிலை தலைகீழாக மாறிவிட்டது. கொலை நகரமாக மாறி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ரவுடிகள் ஒருவரையொருவர் வெட்டிச்சாய்த்த நிலை மாறி தற்போது அரசியல் கொலைகளாக தலைதூக்கி வருகின்றன.

புதுச்சேரியில் ஊரடங்கு காலத்தில் மதுகடத்தல் நடந்ததாகவும், அதற்கு உடந்தையாக தாசில்தார், வருவாய் அதிகாரிகள் இருந்ததாகவும் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் சரியாக கணக்கு காட்டாத 90க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைத்து மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மற்ற மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனாலும் கோவிட் வரி கெடுபிடி காரணமாக மதுபானம் விற்பனை கடுமையாக சரிந்து அரசுக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்பட்டது. இதனால் இதுவரை இல்லாத வகையில் ஒருவித அச்சத்துடன் மதுக்கடைகளை உரிமையாளர்கள் தங்களது தொழிலை நடத்தி வருகின்றனர். பார்கள் மூடப்பட்டு கிடந்த நிலையில் மதுபானங்களை வாங்கிய குடிமகன்கள், ரவுடிகள் சாலையோரத்திலும் தெருக்களிலும் கும்பல் கும்பலாக நின்றும், அமர்ந்தும் சரக்கு அடிக்க ஆரம்பித்தனர். இதனால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் வெளியே சென்றுவரும் சூழல் நிலவியது.

இதுபற்றி காவல்துறை தலைமைக்கு புகார்கள் வரவே, டிஜிபி பாலாஜி வஸ்தவா உத்தரவுக்கிணங்க தெருக்களில் மது அருந்திய 100க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இவ்வாறு பிடிபட்டவர்களை ஒரே நேரத்தில் போலீசார் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை கொண்டு வந்ததால் டாக்டர்கள் அதிருப்தி தெரிவித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் அக்டோபர் முதல் பார்களை திறக்க மாநில அரசு அனுமதித்து விட்ட நிலையில் அறிவிப்பு வெளியான தினத்தில் மொத்தமுள்ள 400 பார்களில் நூற்றுக்கணக்கானவை திறக்கப்பட்டன. அரசின் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படவில்லையென கவர்னர் வரை புகார்கள் சென்றது.

இதையடுத்து பார்கள் செயல்

படுவதற்கு கடும் கட்டுப்பாடுகள், விதிகளுடன் தீவிரமாக கண்காணிக்க கலால் மற்றும் காவல்துறைக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் மதுபான கடை உரிமையாளர்கள் எரிச்சலடைந்தனர். எந்தநேரத்திலும் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறி பாருக்கு மட்டுமின்றி மதுக்கடைக்கும் அதிகாரிகள் சீல் வைக்கலாம் என்பதால் எதுக்கு வீண்வம்பு? என்று கருதி மூடி வைத்துள்ளனர். இதன் காரணமாக மதுபானங்களை வாங்கும் குடிமகன்கள் மீண்டும், சரக்குகளை காலிமனை பகுதிகளுக்கும், சாலையோரங்களுக்கு எடுத்து சென்று மதுபானங்களை குடித்து கும்மாளம் போட்டு வருகின்றனர்.

அதுவும் பட்டப்பகலில் சரக்கு அடிக்கும் ரவுடிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை ஆங்காங்கே அரங்கேற்றி வருகின்றனர். இதனால் மிகுந்த தொல்லைக்கு ஆளான பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் புகார் தருகின்றனர். இதுபோன்று பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக நாள்தோறும் 10 முதல் 20 நபர்கள் வரை வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

மதுகுடித்து விட்டு மேட்டுப்பாளையத்தில் பட்டப்பகலில் ரவுடி கும்பல் லேபர் காண்ட்ராக்டரை வெட்டிக் கொலை செய்து விட்டு துணிச்சலாக பைக்கில் அங்கிருந்து தப்பியது. மது குடிக்க பணமில்லாமல் தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, வணிகர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டும் செயல்களும் அரங்கேற துவங்கியிருக்கிறது. மது அருந்தும் கூடங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவற்றை முறைப்படுத்துவடன், சாலைகளில், தெருக்களில் அமர்ந்து குடிக்கும் மதுபிரியர்களை காவல்துறை தடியடி நடத்தி கலைக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்பாடுகளால் மட்டுமே இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தினமும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்

கிழக்கு எஸ்பி மாறன் கூறுகையில், பார்களை விட்டு வீதிக்கு வந்து ரவுடிகள் குடிப்பதால் மக்களுக்கு தொல்லை அதிகமாகி இருக்கிறது. இதனால் காவல்துறை தனது கண்காணிப்பை தீவிரமாக்கி உள்ளது. தினமும் கூடுதல் நேரம் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பொது இடங்களில் மது அருந்திய நிறைய பேரை பிடித்துள்ளோம். ரெஸ்ட்டாரண்ட்டை விட்டு மதுபிரியர்கள் வெளியே வந்து குடிப்பதால் குற்றங்கள் திறந்த வெளியில் நடக்கிறது. அங்கு சிசிடிவி கேமிரா இல்லாததால் துணிகர குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கும் தொல்லை ஏற்படும் சூழல் இருப்பதால் ரவுடிகளை ஒடுக்க தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

செயல்படாத கலால் போலீஸ்

புதுச்சேரி கலால் துறையில் தனியாக போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாரி, காவலர்கள் பணியில் உள்ள நிலையில் அவர்களின் கண்காணிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக கலால்துறையில் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் சராசரியாக 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் தற்போது பெரியளவில் போலி மதுபான வழக்குகளும் பிடிபடவில்லை. போலி மதுபானங்கள் தாராளமாகி விட்ட நிலையில், யாரும் இதுவரை சிக்காமல் உள்ளனர். சிவில் சப்ளை எதிரே இரவில் சாலைகளில் மதுஅருந்துபவர்களைகூட இந்த போலீசார் கண்டுகொள்வதில்லை. அந்தளவுக்கு கலால்துறை போலீசாரின் செயல்பாடு உள்ளது.

குடிமகன்கள் புலம்பல்

இதுபற்றி புதுச்சேரி ‘குடி’மகன்களிடம் கேட்டபோது, நிம்மதியாக பாரில் அமர்ந்து மது அருந்தலாம் என்று வந்தால் அங்கு அனுமதிக்க மறுக்கிறாங்க. இதனால் வேறு வழியின்றி சாலைகளிலும், தெருக்களிலும் நின்று மது அருந்த வேண்டிய இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். போலீசாரின் வழக்கு, கைது நடவடிக்கைகளும் பாய்கின்றன. எங்களால் அரசுக்கு தினமும் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் நிலையில் பார்களை முறைப்படுத்த அதிகாரிகள் தயங்குவது ஏன்? என ஆதங்கப்பட்டனர்.

Related Stories: