கொரோனாவால் தொடர்ந்து மூடி கிடந்த செம்மாங்குடி ரோடு 7 மாதங்களுக்கு பின் திறப்பு: வியாபாரிகள் உற்சாகம்

நாகர்கோவில்: கொரோனா காரணமாக மூடப்பட்டு கிடந்த செம்மாங்குடி ரோட்டை நேற்று முன்தினம் யாரோ திறந்துவிட்டனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதி அளிக்கப்பட்டது. நெருக்கடியான வர்த்தக பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. அதன்படி நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, அலெக்சாண்ட்ரா பிரஸ் ரோடு அடைக்கப்பட்டன. இந்த பகுதியில் நெருக்கமாக கடைகள் உள்ளதால், மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு செப்டம்பர் மாதத்தில் வழக்கம் போல் அனைத்தும் இயங்க தொடங்கின. அக்டோபர் 1ம் தேதியில் இருந்து, இரவு 9 மணி வரை கடைகள் நடத்த அனுமதியும் கொடுக்கப்பட்டது.

ஆனால் செம்மாங்குடி ரோடு, அலெக்சாண்ட்ரா பிரஸ் ரோட்டில் வைத்திருந்த தடுப்புகள் மட்டும் அகற்றப்படாமல் இருந்தன. இந்த நிலையில் நவம்பர், டிசம்பர், ஜனவரி என 3 மாதங்களும் பல்வேறு விழாக்கள் வர உள்ளன. குறிப்பாக நவம்பர் 14ம் தேதி தீபாவளி வர உள்ளது. பின்னர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என விழாக்கள் உள்ளன. தடுப்புகள் இருந்ததால் செம்மாங்குடி ரோடு, அலெக்சாண்ட்ரா பிரஸ் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு யாரும் செல்ல வில்லை. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென செம்மாங்குடி ரோட்டில் கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை சிலர் அகற்றினர்.

இதனால் நேற்று காலை முதல் செம்மாங்குடி ரோட்டில், வழக்கம் போல் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மக்களும் சகஜமாக சென்றனர். மாநகராட்சி எந்த உத்தரவும் கொடுக்காத நிலையில், யார் தடுப்புகளை அகற்றியது என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஆனால் சுமார் 7 மாதங்களாக எந்த வியாபாரமும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த வியாபாரிகள் தீபாவளி, கிறிஸ்துமசை தான் பெரிதும் நம்பி உள்ளனர். இதில் தடுப்புகள் தொடர்ந்து இருந்ததால் தன்னிச்சையாக அவர்களே அகற்றி இருப்பார்கள் என கூறப்படுகிறது. மாநகராட்சி ஆணையர், மாநகர நகர் நல அலுவலர் வந்த பின், இதில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.

Related Stories: