ஐப்பசி முதல் நாள் துலாஸ்நானம் திருப்பராய்த்துறை காவிரியில் திரளான பக்தர்கள் நீராடினர்: ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு தங்க குடத்தில் தீர்த்தம்

திருச்சி: ஐப்பசி துலா மாத பிறப்பையொட்டி நேற்று திருச்சி அருகே திருப்பராய்த்துறை காவிரியில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காவிரி நதியின் ராசி துலா என்பதால் ஐப்பசி மாதத்தில் தினந்தோறும் காவிரியில் நீராடி பெருமாளை தரிசிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஐப்பசி துலா மாதத்தில் மயிலாடுதுறையில் துலாகட்டத்தில் ஐப்பசிமாதம் கடைசி நாளன்று ‘கடை முழுக்கு’ எனும் துலா ஸ்நானம் நடப்பதுபோல ஐப்பசி மாதம் முதல் தேதியில் திருப்பராய்த்துறை காவிரிக் கரையில் ‘ஐப்பசி முதல் முழுக்கு’ எனும் துலாஸ்நானம் நடக்கிறது. நேற்று ஐப்பசி மாத பிறப்பையொட்டி அகண்ட காவிரியான திருச்சி அருகே திருப்பராய்த்துறை காவிரியில் ஐப்பசி முதல் முழுக்கு துலாஸ்நானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி சுவாமி வழிபட்டனர்.

இதையொட்டி திருப்பராய்த்துறைநாதர் சுவாமி, அம்பாளுடன் காலை 6 மணிக்கு ரிஷப வாகனத்தில் காவிரிக்கரையில் எழுந்தருளினர். வழக்கமாக சுவாமி நான்கு வீதிகள் வலம் வரும். ஆனால் கொரோனா காரணமாக காவிரி கரை வலம் வராமலே மண்டபத்தில் காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கொரோனா காரணமாக பக்தர்களின் வருகையும் குறைவாகவே இருந்தது. இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஐப்பசி முதல் முழுக்கையொட்டி அம்மா மண்டபம் காவிரியில் வழக்கத்தைவிட குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களே புனித நீராடினர். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு காவிரியிலிருந்து தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு 11 மாதங்களும் கொள்ளிடத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து நைவேத்தியம், நித்திய சேவைகள், தீர்த்தங்கள் வழங்கப்படும். ஆனால் துலா மாதத்தில் மட்டும் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படும்.

அதன்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து காவிரிக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து பெருமாளுக்கு திருவாராதனம் மற்றும் திருமஞ்சனம், பூஜைகள் நடைபெற்றது. துலா மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் பெறும். மேலும் மூலவர் பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

கோயில் கருட மண்டபத்தில் துலா மாதம் முழுவதும் துலா காவிரி புராணம் பாராயணம் செய்யப்படும். ஐப்பசி மாதம் முழுவதும் தினமும் நம்பெருமாளுக்கு யானை மீது தங்கக்குடத்தில் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு பூஜைகள் நடைபெறும். மயிலாடுதுறை துலாக் கட்டம்: மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் நேற்று தொடங்கியது. இந்தஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் சுவாமி புறப்பாட்டிற்கு அரசு தடைவிதித்துள்ளதால் நேற்று மதியம் 1.30 மணிக்கு நடந்த முதல்நாள் தீர்த்தவாரி உற்சவத்திற்கு மாயூரநாதர்கோயில், வதானேஸ்வரர்கோயில், அய்யாறப்பர்கோயில், காசிவிஸ்வநாதர் கோயில்களில் இருந்து அஸ்திரதேர்வர்கள் மட்டும் காவிரியில் எழுந்தருளி தீர்த்தம்கொடுக்கும் நிகழச்சி நடைபெற்றது.

* 34ம் ஆண்டாக ஆண்டாள் சேவை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கோயில் யானை ஆண்டாள் கடந்த 1986ம் ஆண்டு அக்டோபர் 16ல் சேவை செய்ய கோயிலுக்கு வந்தது. ஆண்டாள் தனது முதல் சேவையாக துலா மாதம் காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வந்தது. அன்று முதல் தற்போது வரை துலா மாத பிறப்பு வரை காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனித நீரை எடுத்துவருகிறது. இந்தாண்டு 34ம் ஆண்டாக ஆண்டாள் யானை புனித நீர் கொண்டு வந்து பெருமாளுக்கு சேவையை தொடர்ந்து செய்து வருகிறது.

Related Stories: