திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணி அலுவலர், பெண் ஊழியரை ஆபாசமாக பேசிய உதவி செயற் பொறியாளர்: சமூகவலைதளத்தில் ஆடியோ வைரல்; விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் புகார்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட 14 வார்டுகளில் குப்பை சேகரிப்பது, அதனை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிப்பது போன்ற பணிகளில் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 1000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 75 சதவீதம் பேர் பெண்கள். இந்த பணியாளர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தன்னார்வலர் அமைப்பை சேர்ந்த சிலர் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணி அலுவலர்கள் மற்றும் பெண் ஒப்பந்த ஊழியர்களை மண்டல உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் பலமுறை வாய்மொழியாக புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இந்நிலையில், நேற்று முன்தினம் 1வது வார்டில் பணிபுரியும் தூய்மை பணி அலுவலர் பாபு என்பவரிடம் தொலைபேசியில் பேசிய உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், ஆபாசமான வார்த்தைகளால் அவரை திட்டியதோடு, உடன் பணியாற்றும் பெண் ஊழியர் பெயரை குறிப்பிட்டு அவரை இணைத்து ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்தப் பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த தூய்மை பணி அலுவலர் பாபு, மாநகராட்சி விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் இதுபற்றி புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் உயரதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமாரிடம்  விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் தன்னார்வலருக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினர் களம் இறங்கியதோடு,  பெண்களை இழிவாக பேசும் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் எண்ணூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து எண்ணூரை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார் தூய்மை பணியில் ஈடுபடும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார். பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசுவது, எதிர்ப்பவர்களை டார்ச்சர் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இங்கு பணிபுரியும் பெண்கள் பெரும்பாலானோர் குடும்பத்தில் உள்ள கஷ்டத்திற்காக குப்பைகளை சேகரிக்க வருகின்றனர். இவர்கள், உதவி செயற்பொறியாளர் மீது புகார் செய்தால் வேலை போய்விடுமோ என்ற பயத்தில் வெளியில் சொல்ல  அச்சப்படுகின்றனர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: