கேப்டன் பொறுப்பில் இருந்து டிகே விலக நெருக்கடி கொடுக்கப்பட்டதா? முன்னாள் வீரர்கள் கண்டனம்

புதுடெல்லி: கொல்கத்தா அணி  கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக்கை கட்டாயப்படுத்தி விலக வைத்துள்ளனர் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேகேஆர் அணியின் கேப்டனாக 2018ல்  பொறுப்பேற்றவர் தினேஷ் கார்த்திக். இந்த சீசனிலும் கேப்டனாக தொடர்ந்தார். அவர் தலைமையில் விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்தது கொல்கத்தா. 8வது போட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்க இருந்த நிலையில், அன்று பிற்பகல் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் விலகினார். ‘பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புவதால் தினேஷ் தனது கேப்டன் பொறுப்பை மோர்கனிடம் ஒப்படைத்துள்ளார்’ என்று கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தினேஷ் கார்த்திக்கை கட்டாயப்படுத்தி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வைத்துள்ளதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், ‘எனக்கு தெரிந்தவரை, நான் கேள்விபட்டவரை டிகே தாமாக முன்வந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவில்லை. அணி நிர்வாகம்தான் அவரது பதவியை பறிந்துள்ளது. அவரை கட்டாயப்படுத்தி தாமாக முன்வந்து விலகியதாக சொல்ல வைத்துள்ளது. எந்த நேர்மையான கேப்டனும், நடுவழியில் தனது பொறுப்பை விட்டு விலகமாட்டார். தனிப்பட்ட முறையிலும் அவர் சிறப்பாகவே விளையாடுகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக குறைந்த பந்தில் அரை சதம் விளாசினார். அப்படி இருக்க பேட்டிங்கில் கவனம் செலுத்த விலகியதாக கூறுவது நம்பும்படி இல்லை’என்று கொதித்துள்ளார்.

கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர், ‘உலக கோப்பையை வென்ற கேப்டன் அணியில் இருப்பதால் தினேசை கேப்டன் பொறுப்பில் இருந்து கட்டாயப்படுத்தி விலக வைத்திருப்பது சரியல்ல. கேப்டனை மாற்றும் அளவுக்கு கொல்கத்தா அணி மோசமான நிலையிலும் இல்லை. இந்த மாற்றம் எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. பாதியில் கேப்டன் பொறுப்பை கொடுப்பதால் மோர்கன் ஒன்றும் புதிதாக சாதித்துவிடப் போவதில்லை. அப்படி பதவி தருவதாக இருந்தால் முதலிலேயே தந்திருக்கலாம். ஏன் தினேசுக்கு நெருக்கடி தர வேண்டும். எப்படி இருந்தாலும் இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறியுள்ளார்.

Related Stories: