விதிகளை மீறி ஓவர் லோடுடன் வேகம் காட்டும் லாரிகளால் தெறித்து ஓடும் பொதுமக்கள்: கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்?

திருச்சுழி: திருச்சுழி பகுதிகளில் கற்களை கொண்டு செல்லும் லாரிகளை கண்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி ஒதுங்கும் அவலம் தொடர்கிறது. திருச்சுழி பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இங்கிருந்து மணல் கலந்த தூசி மற்றும் ஜல்லிக்கற்கள் லாரிகள் மூலமாக அண்டை மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் அவ்வப்போது மெகாசைஸ் கற்களை பெயர்த்து அப்படியே கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. ஒவ்வொரு கனரக வாகனங்களில் 50 முதல் 70 டன் வரை கொண்டு செல்கின்றன. இதனை காவல்துறையினரும், வருவாய்துறையினரும் கண்டு கொள்ளுவதில்லை.

கிராமங்களில் உள்ள குறுகிய சாலைகளில் அதிவேகமாக செல்லும் இந்த லாரிகளால் இப்பகுதி கிராம மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது லாரிகளில் தார்பாய் வைத்து மூடப்படாமல் செல்வதால் கண்ணில் தூசி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் விதிகளை மீறி லாரிகளில் மெகா சைஸ் கற்களை கொண்டு  வேகமாக செல்லுவதால் பின்னே வரும் வாகனங்கள் மீது கற்கள் உருண்டு விழும் நிலையால் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் அதிவேகமாக கற்கள் கொண்டு செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து திருச்சுழியைச்  சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், `` தமிழ்பாடி, திருச்சுழி, நரிக்குடி ஊர்களில் கூட்டம் அதிகமாக உள்ள கடைவீதிகளிலும் கற்களை ஏற்றி செல்லும்  லாரிகள் கட்டுப்பாடின்றி வேகமாக செல்கின்றன. மரண வேகத்தில் வரும் லாரிகளால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை காவல்துறையினரும், வருவாய்துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே,  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினர்.

Related Stories: