ஒரே வாரத்தில் அடுத்தடுத்து பரிதாபம் பீகாரில் 2வது அமைச்சரை பலி வாங்கியது கொரோனா

பாட்னா: பீகாரில் ஒரே வாரத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த மேலும் ஒரு அமைச்சர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களும் பலியாகி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய ரயில்வே இணையமைச்சர் அமைச்சர் சுரேஷ் அங்காடி. உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜ அமைச்சர் கமல் ராணி, பீகாரை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வினோத் சிங், தமிழகத்தை சேர்ந்த வசந்த குமார் உள்ளிட்ட 4 எம்பி.க்கள், 6 எம்எல்ஏ.க்கள் இதுவரை பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம் பெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சருமான கபில் தியோ காமத், கொரோனாவுக்கு நேற்று பலியானார். இவருக்கு கடந்த 1ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 சிறுநீரகங்களும் செயல் இழந்ததால் உடல் நிலை மோசமானது. அதனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று அதிகாலை 1.50க்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது. இவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இவருடைய மனைவி சில மாதங்களுக்கு முன்புதான் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி அமைச்சர் வினோத் சிங் இறந்த நிலையில், காமத்தின் இறப்பு மூலம் கொரோனாவுக்கு 2வது அமைச்சரை முதல்வர் நிதிஷ் இழந்துள்ளார். காமத் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாக்., ஆப்கான் கூட சிறப்பா செஞ்சிருக்கு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘2020-2021ம் ஆண்டிற்கான வளர்ச்சி குறித்த சர்வதேச நிதியத்தியின் அறிக்கையில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம். இது பாஜ அரசின் மற்றுமொரு திடமான சாதனையாகும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக கையாண்டுள்ளன,’ என கூறியுள்ளார்.

குலாம் நபி ஆசாத்துக்கும் தொற்று

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 71) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, அவர் நேற்று தனது டிவிட்டரில் பதிவிட்டு, ‘வீட்டு தனிமையில் உள்ளேன். சமீபத்தில் என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.

Related Stories: