அறிவியல் அளவுக்கு தமிழ் வளரவில்லை: முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், பல்கலைக்கழக நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட முடியாது. ஏழை எளிய மாணவர்களின் கல்வி என்பதற்காக கல்வியின் தரத்தை உயர்த்தாமல் இருக்க முடியுமா என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விளக்கப் புத்தகம் ஒன்றை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்தது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.  

அண்ணா பல்கலை துணை வேந்தர் சூரப்பா, முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சிக்கு பிறகு, அதே புத்தகத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டனர். அப்போது முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கல்வியில் இலக்குகளை அடைய புதிய கல்விக் கொள்கை தேவை. உலக அளவில் இந்தியா ஆராய்ச்சித் துறையில் குறைந்த அளவில் பங்காற்றியுள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர் எண்ணிக்கையை அடைய புதிய கல்விக் கொள்கை அவசியம். தாய்மொழியில் கற்றுக்கொண்டால்தான் எளிதாக புரியும். ஆனால், தமிழ், தமிழ் என்று கூறுகின்றோமே தவிர, தமிழை வளர்க்க முடியவில்லை.

அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் அளவுக்கு உயர்ந்தால்தான் மொழி வளர்ந்ததாக பொருள். இலக்கிய அளவில் தமிழ் சரியானதுதான். ஆனால், அறிவியல் அளவுக்கு சரியான சொற்கள் தமிழில் இல்லை. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்க மறுத்தது அரசியல் உள்நோக்கம்  கொண்டது. அது துரதிர்ஷ்டவசமானது. தமிழக அரசு அதன் முடிவை மறுபரிசீலனை  செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் அதிக நிதி ஆதாரம் கிடைக்கும். ஏழைகளுக்காக வேண்டி கல்வித் தரத்தை குறைக்க முடியுமா? எல்லாருக்கும் தேவையான வசதிகளை  செய்து தர வேண்டும்.

ஏழை மாணவர்கள் படிப்பதற்காக தனியாக கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்தை வேண்டாம் என்று கூறலாமா? அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது குறித்த விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா எந்த தவறும் செய்யவில்லை. தமிழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ள ஒரு பல்கலைக்கழகம் தேவை என்று அவர் கருதியதில் எந்த தவறும் இல்லை. அறிவியல் அளவுக்கு தமிழ் வளரவில்லை என்று பாலகுருசாமி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: