சர்ச்சைக்குரிய காட்சி இடம் பெற்றதால் ஜூவல்லரி கடைக்குள் நுழைந்து மேலாளருக்கு கும்பல் மிரட்டல்: விளம்பரத்தை நிறுவனம் திரும்ப பெற்றது

அகமதாபாத்: சர்ச்சைக்குரிய விளம்பர காட்சியை வெளியிட்டதாக குஜராத்தில் உள்ள தனிஷ்க் நகைக் கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த நகைக்கடைகள், சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டன. மக்கள் பழையபடி, கடைகளுக்கு சென்று நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மக்களை கவர்வதற்காக பிரபல நகைக்கடைகள் வித விதமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

 டாடா நிறுவனத்தின் கிளை நிறுவனமான,‘தனிஷ்க் ஜூவல்லரி’யும் சமீபத்தில் டிவி விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில், இஸ்லாமியரை மணந்த இந்து பெண் ஒருவருக்கு, அவருடைய மாமியார் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துவது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த காட்சி, காதல் திருமணங்களின் மூலம் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் ‘காதல் புனிதப்போர்’ (லவ் ஜிகாத்) அம்சத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக கூறி, சிலர் தனிஷ்க் நிறுவனத்துக்கு எதிராக இணையதளங்களில் பதிவிட தொடங்கினர். சமூக வலை தளங்களில், தனிஷ்க் ஜுவல்லரியை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக், டிவிட்டரில் டிரெண்டிங் ஆனது.

 இதையடுத்து, தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பரத்தை திரும்ப பெற்றது. டிவிட்டர் மூலமாக விளக்கம் ஒன்றையும் அளித்தது. அதில், ‘இந்த சவாலான நேரத்தில் பல்வேறு தரப்பு மக்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக இணைந்து நிற்பதை கொண்டாடுவதும் ஒற்றுமையின் அழகை கொண்டாடுவதும் இந்த விளம்பர பின்னணியில் உள்ள யோசனை. ஆனால், இந்த வீடியோ அதன் குறிக்கோளுக்கு மாறாக, மாறுபட்ட மற்றும் கடுமையான எதிர்வினைகளை தூண்டி விட்டு விட்டது. எனவே, ஊழியர்களின் நலனை மனதில் வைத்து இந்த வீடியோவை திரும்பப் பெறுகிறோம்,’ என்று கூறப்பட்டிருந்தது.

 இந்நிலையில், இந்த விளம்பரத்துக்கு நேரடியாக தனிஷ்க் நிறுவனம் மன்னிப்பு கேட்கவில்லை என கூறி, குஜராத்தில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரிக்குள் சில மர்ம நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், கடை மேலாளரை மன்னிப்பு கேட்க மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் தாக்குதல் நடக்கவில்லை என்று அந்த மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: