ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்கார கொலை சிகிச்சை அளித்த மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகள் இல்லை: சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

ஆக்ரா,:ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் உள்ள சிசிடிவி பதிவுகள் அழிந்துள்ளது மீண்டும் இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் செப்டம்பர் 14ம் தேதி வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது இளம்பெண்ணை கடத்திச் சென்று 4 நபர்கள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இளம்பெண் தங்களை காட்டி கொடுத்துவிடுவார் என கருதிய அந்த நபர்கள், கழுத்தில் கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை உ.பி. போலீசார் கைது செய்தனர். அந்த நபர்களை தூக்கிலிட வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில், ஹத்ராஸ் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். மாநில உள்துறை செயலாளர் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தொடங்கிய சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும் விபரம் தெரிந்தவுடன் முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் இருந்து சிபிஐ நீக்கியது. இது சமூக ஆர்வலர்களிடையே சிபிஐ மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இளம்பெண் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மருத்துவமனையில் உள்ள சிசிடிவி பதிவுகள் அளிக்கப்பட்டுள்ள செய்தி மீண்டும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து இறந்துபோன பெண்ணின் சகோதரர்கள் மற்றும் தந்தையிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.இதையடுத்து, இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செப்டம்பர் 14ம் தேதி முதல் அதாவது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணமடைந்த நாளிலிருந்து மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகள் முழுவதும் அழிந்துள்ளன.

இது குறித்து மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளரிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டபோது, மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் சிசிடிவி பதிவு குறித்து எதுவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்கவில்லை. 7 நாட்களின் பதிவுகள் மட்டுமே இருக்கும். சம்பவம் நடந்து ஒரு மாதமாகிறது. அதனால், அந்த பதிவுகள் தானாக அழிந்துவிடும். ஒவ்வொரு 7 நாட்களுக்கும் ஒருமுறை பழைய பதிவுகள் அழிந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் அந்த மருத்துவமனையில் மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

இளம்பெண் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நாளில் அந்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.எதற்காக சிசிடிவி பதிவுகளை போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் கேட்கவில்லை என்று சிபிஐ கேள்வி எழுப்பியது. அதற்கு போலீஸ் தரப்பில், ‘சம்பவம் நடந்த இடம் மருத்துவமனை இல்லை. அதனால் விசாரணை வளையத்திற்குள் மருத்துவமனையை சேர்ப்பதால் எந்த பயனும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளம்பெண் படுகொலையில் கைது செய்யப்பட்டு அலிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4   குற்றவாளிகளும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி ஹத்ராஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டிடம் சில மூத்த அதிகாரிகள் மனுவை பரிசீலிக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் இருப்பதால் சிபிஐ தனது பணியை சரியாக செய்யும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories: