இள்ளலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.25 லட்சம் கையாடல்: 2 பேர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் அருகே இள்ளலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.25 லட்சம் கையாடல் நடந்தது. இதுதொடர்பாக 2 பேரை, போலீசார் கைது செய்தனர். திருப்போரூர் அடுத்த இள்ளலூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இங்கு கடந்த மாதம் வருடாந்திர தணிக்கை நடந்தது. அப்போது, கடந்த 2017 - 2018 நிதியாண்டில் ரூ.25 லட்சத்து 51 ஆயிரம் கையாடல் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நெல்லிக்குப்பம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் முதுநிலை எழுத்தராக இருந்த செங்கல்பட்டை சேர்ந்த சுந்தரவடிவேலு (57) என்பவர், அப்போது இள்ளலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயலாளராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார். அப்போது அவரும் எழுத்தராக பணியாற்றிய இள்ளலூரை சேர்ந்த ரமேஷ் (42) என்பவரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, அந்த தணிக்கை அறிக்கை, மாவட்டக் கூட்டுறவு பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர், செங்கல்பட்டு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சிவக்குமார், இள்ளலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்தார். அதில், பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டது உண்மை என தெரியவந்தது. இதுகுறித்து, காஞ்சிபுரம் குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி செயலாளராக பணியில் இருந்த சுந்தரவடிவேலு (57), எழுத்தர் ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர். பின்னர், செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

* 3 முறை தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட வங்கி

இள்ளலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு தேர்தல் நடத்த, பலமுறை முயன்றும் இதுவரை நடத்த முடியாத நிலை உள்ளது. ஒருமுறை வாக்குப்பெட்டியில் மை ஊற்றப்பட்டது. அடுத்த முறை வேட்பாளர் விண்ணப்பப் படிவங்கள் கிழித்து எறியப்பட்டது. 3வது முறை தேர்தல் அதிகாரியாக வந்தவர் தாக்கப்பட்டார். இதனால், இதுவரை இந்த கூட்டுறவு வங்கிக்கு தேர்தல் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: