காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்து கேட்டு மீண்டும் போராடுவோம்: மெகபூபா முப்தி அறிவிப்பு

ஸ்ரீநகர்: ‘‘ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்க போராடுவோம்,’’ என்று சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அறிவித்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, இந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உட்பட பல தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பரூக், உமர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில், கடந்த 14 மாதங்களாக காவலில் இருந்த மெகபூபா, நேற்று முன்தினம் இரவு திடீரென விடுதலை செய்யப்பட்டார்.

தனது விடுதலையை தொடர்ந்து, தனது டிவிட்டர் பதிவில் ஆடியோ உரை ஒன்றை மெகபூபா வெளியிட்டுள்ளார். அதில், ‘சிறப்பு அந்தஸ்து நீக்கம் என்பது மத்திய அரசின் பட்டப்பகல் கொள்ளை. சட்ட விரோதமாக, ஜனநாயகம் இல்லாமல், அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டு நமது உரிமை பறிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் நலனுக்காக எத்தனையோ பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் அர்த்தமுள்ளதாக மாற, மீண்டும் 370 சட்டப்பிரிவைக் கொண்டு வர நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இது அத்தனை சுலபமான வேலையல்ல. நான் விடுதலை செய்யப்பட்டு விட்டேன். ஆனால், காஷ்மீரின் மக்கள் இன்னும் பல இடங்களில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

* பரூக் அப்துல்லா சந்திப்பு

விடுதலை செய்யப்பட்டுள்ள மெகபூபாவை அவருடைய வீட்டுக்கு வந்து, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர்துல்லா நேற்று சந்தித்து பேசினர். அரசியலில் எதிர் துருவமாக உள்ள இருவரும் சந்தித்து பேசியதால், சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து காஷ்மீரில் மீண்டும் போராட்டம் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: