களமாவூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடையும் முன் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால் வாகனஓட்டிகள் கடும் வேதனை: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை: சுமார் 14 ஆண்டுகளாக களமாவூர் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முடிவடையாமல் இருக்கும் நிலையில், நெடுஞ்சாலைக்கான சுங்கக் கட்டணம் வசூலித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர்.திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் (என்எச் 120) 19வது கிமீ தொலைவில் உள்ளது நல்லூர் சுங்கசாவடி. என்எச் 210ல் சுமார் 44 கிமீ தொலைவில் ரூ.361 கோடி மதிப்பில் சாலை அமைக்கப்பட்டு முழுமையாக பொதுமக்களின் பங்களிப்பின்படி (சுங்கக் கட்டணவசூல்) சாலை 2014ல் அமைக்கப்பட்டது. அன்றில்இருந்து நல்லூர் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டும் வருகிறது.நாளொன்றுக்கு சராசரியாக 15 ஆயிரம் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியைக் கடந்து செல்கின்றன.இப்போதைய நிலவரப்படி கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை பயணிக்க ரூ. 35, இருமுறை பயணிக்க ரூ. 55 வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, பேருந்துகள், டிரக்குகளுக்கு ஒரு முறை பயணிக்க ரூ. 125, இரு முறை பயணிக்க ரூ. 185ம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், சுங்கச்சாவடியில் இருந்து ஒரு கிமீ தொலைவுக்குள்ளேயே களமாவூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்கு முன்பு இம்மேம்பாலத்துக்கான பணிகள் ரூ. 50 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன.இந்தத் தொகை போதவில்லையென அப்போதிருந்தே கட்டுமான நிறுவனம் பணிகளில் சுணக்கம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்காக கூடுதலாக ரூ.12 கோடி தேவையென்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பிறகு காலப்போக்கில் கிடப்பில் கிடந்த பாலமாக மாறிப்போனது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திருநாவுக்கரசர் வெற்றி பெற்ற பிறகு, இப்பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கிச் சென்றார்.

அதன்பிறகு, வேறொரு ஒப்பந்ததாரரைக் கொண்டு பணிகளைத் தொடங்குவதாகவும் கூறப்பட்டது. தற்போது ரயில்வே மேம்பாலத்துக்கு இருபுறமும் அமைக்கப்பட்ட மேம்பாலம் முழுமையாக உடைக்கப்பட்டு புதிதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியும் எப்போது முடியும் எனத் தெரியாத அளவுக்கு மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.பாலப்பணிகளுக்காக பக்கவாட்டில் அமைக்கப்பட்ட அணுகுசாலை மிகவும் மோசமாக சேதமடைந்திருக்கிறது. இந்தச் சாலையின் வழியாகத்தான் சுங்கக்கட்டணம் செலுத்திய வாகன ஓட்டிகள் சென்று திரும்புகின்றனர். ரயில்வே கேட் போடப்பட்டால் சுமார் 15 நிமிடங்கள் வரிசையில் நின்றுதான் செல்ல வேண்டும்.

பாலப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் அதுவும் சுங்கக் கட்டணம் செலுத்திய அடுத்த சில நொடிகளிலேயே மோசமான சாலையையும், ரயில்வே கேட்டையும் கடக்க வேண்டிய சூழல் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. எனவே, பணிகள் முழுமையாக முடியாத நிலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வியை வாகன ஓட்டிகள் எழுப்புகின்றனர். இதற்கான தீர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே கேட் போடப்பட்டால் சுமார் 15 நிமிடங்கள் வரிசையில் நின்றுதான் செல்ல வேண்டும். பாலப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் அதுவும் சுங்கக் கட்டணம் செலுத்திய அடுத்த சில நொடிகளிலேயே மோசமான சாலையையும், ரயில்வே கேட்டையும் கடக்க வேண்டிய சூழல் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.

Related Stories: