பரிதியப்பர்கோவில் சேமிப்பு கிடங்கில் ஷெட் இல்லாததால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்: அரசுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம்

ஒரத்தநாடு: பரிதியப்பர்கோயில் கிராமத்தில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் ஷெட் அமைக்காததால் நெல் மூட்டைகள் வீணாகி வருவதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20,000 ஏக்கருக்கு மேல் கோடை சாகுபடியை விவசாயிகள் செய்திருந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடவு செய்து ஏப்ரல் மாதம் இறுதியில் அறுவடை செய்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்தனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பரிதியப்பர்கோவில் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

தற்போது நெல் மூட்டைகளின் தேவை அதிகளவில் இருப்பதால் வெளிமாவட்டங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகியுள்ளது. நெல்மணிகளில் உள்ள ஈரத்தால் பெரும்பாலான சாக்குகள் கிழிந்துள்ளது. இதனால் 1,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நாசமாகியுள்ளது. நெல் மூட்டை அடுக்கின் வெளிபுறத்திலுள்ள நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்துள்ளதால் பதறாகி விட்டது. எனவே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க ஷெட் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகளை போதுமான பாதுகாப்பில்லாமல் வைத்துள்ளதால் வீணாகி வருகிறது. சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 1,000 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வீணாகி விட்டது. எனவே திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கு ஷெட் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்றனர்.இதுகுறித்து சேமிப்பு கிடங்கு அலுவலர் கூறுகையில், கடந்த கோடை காலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை உலர்த்தாமல் இருப்பதாலும், நெல் மூட்டைகளை தார்படுதாவால் மூடி வைத்துள்ளதாலும் அதில் வியர்த்து அதிலுள்ள தண்ணீர் பட்டு நெல் மூட்டைகள் வீணாகி விட்டது. தற்போது கிழிந்த சாக்கு மூட்டைகளை மாற்றும் பணி நடந்து வருகிறது என்றார்.

Related Stories: