பந்தலூர் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பந்தலூர்: பந்தலூர் அருகே கையுன்னி வெளக்கலாடி பாலம் அருகே ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆற்று ஓரத்தில் உள்ள நடைபாதையையும், ஆற்றின் குறுக்கே இருந்த தடுப்பணையின் தடுப்பு சுவரையும் நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றின் குறுக்கே இருந்த தடுப்பணை உடைந்து சேதமானது. மேலும் நடைபைதையில் மண் அரிப்பு ஏற்பட்டு நடைபாதை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் நடைபாதை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.

இதனால், கையுன்னி, போத்துகுலி, பி.ஆர்.எப். காலனி, பைங்கால் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.

தற்போது பருவ மழை குறைந்து ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளதால், கையுன்னி மற்றும் பிறப்பகுதிகளுக்கு செல்வதற்கு மக்கள் ஆற்றில் இறங்கி சென்று வருகின்றனர்.    இதில் குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் ஆற்றை கடந்து செல்வதற்கு மிகவும் அவதியடைந்து  வருகின்றனர். மேலும் தொடர்ந்து மழை நீடித்தால், வெளக்கலாடி பாலம் சேதம் ஏற்பட்டு சேரம்பாடியில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் நெடுஞ்சாலை துண்டிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பகுதிக்கு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: