நீதிமன்ற நேரத்தை வீண் செய்தீர்களா?: நீதிபதி எச்சரிக்கையைடுத்து சொத்து வரி தொடர்பான மனுவை வாபஸ் பெற்றார் நடிகர் ரஜினி.!!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கையைடுத்து சொத்து வரிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை நடிகர் ரஜினிகாந்த் வாபஸ் பெற்றார். சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண  மண்படம் உள்ளது. இந்த மண்டபம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸ்சில், கடந்த பிப்ரவரி மாதம் சொத்து வரி செலுத்தியுள்ளார். இதற்கு அடுத்த 6 மாத வரியாக ரூ.6.50 லட்சம் சொத்து வரியை நாளை  அக்டோபர் 14-ம் தேதிக்குள் கட்ட வேண்டும். வரியை கட்டவில்லை என்றால் 2% அபராதத்துடன் வட்டியுடன் வரி கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் வரி கட்டணம் பாதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தனக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை பாதியாக குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி சென்னை மாநகராட்சிக்கு கடிதம்  எழுதியுள்ளார். இந்த கடிதம் பரிசீலினை செய்யப்படாத நிலையில், சொத்து வரியை ரத்து செய்யக்கோரி கடந்த 29-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினி வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஏப்ரல்-செப்டம்பர் காலத்தில் மத்திய, மாநில  அரசுகள் விதித்த பொதுமுடக்கத்தால் மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சமந்த், அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கடந்த 23-ம் தேதி வரியை குறைக்க கடிதம் அனுப்பி விட்டு, அடுத்த 10 நாட்களில் எப்படி  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தீர்கள். நீதிமன்ற நேரத்தை வீண் செய்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார். கடிதம் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க அதிகாரிகளுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவகாசத்திற்குள் முடிவு  எடுக்கவில்லை என்றால், நினைவுட்டல் கடிதம் அனுப்ப வேண்டும். இந்த கடிதம் மாநகராட்சிக்கு அனுப்பவில்லை. எந்த நடைமுறைகளை பின்பற்றாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற நேரத்தை வீண் செய்ததாகவும், நடைமுறைகளை பின்பற்றாமல் வழக்கு தொடர்ந்தற்காகவும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக எச்சரித்தார். அப்போது, ரஜினி தரப்பு வழக்கறிஞர் வழக்கை தள்ளுபடி செய்ய  வேண்டாம். வழக்கை திரும்ப பெற்று கொள்கிறோம் என்று பல முறை கோரினார். நடைமுறைகளை பின்பற்றிவிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் புதிய மனு தாக்கல் செய்வதாகவும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதி,  வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் கடிதம் பெற்றப்பின் மாலை வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை மாலை ஒத்திவைத்தார்.

Related Stories: