ஸ்டேடியத்துக்கு வெளியே பறந்த பந்து சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் போட்டியில், ஆர்சிபி வீரர் டி வில்லியர்சின் அதிரடி ஆட்டம் கேகேஆர் பந்துவீச்சாளர்களை மிரள வைத்தது என்றால் மிகையல்ல. ஆட்டமிழக்காமல் 73 ரன் எடுத்த அவர் 5 பவுண்டரி மற்றும் அரை டஜன் சிக்சர்களை விளாசியதுடன் சில பந்துகளை ஸ்டேடியத்துக்கு வெளியே பறக்கவிட்டார். அப்படி பறந்த பந்துகள் சாலையில் விரைந்து கொண்டிருந்த கார்களின் கண்ணாடிகளை பதம் பார்த்தன. ஒரு பந்து, பெற்றோருடன் நடந்து கொண்டிருந்த சிறுவனின் கையில் அகப்பட, ‘ஓவர்நைட் ஒபாமா’வாக ட்விட்டரில் ட்ரெண்டாகிவிட்டான்.

அந்த போட்டியில் 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன் மட்டுமே எடுத்து 82 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்றது. கில் 34, ரஸ்ஸல், திரிபாதி தலா 16 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்ட முடியவில்லை. ஆர்சிபி பந்துவீச்சில் மோரிஸ், சுந்தர் தலா 2, சைனி, சிராஜ், சாஹல், உடனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். டி வில்லியர்ஸ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். நடப்பு தொடரில் 50 சதவீத லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது. மும்பை, டெல்லி, பெங்களூர் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கின்றன. ஆர்சிபி அணி தனது 8வது லீக் ஆட்டத்தில் நாளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சந்திக்கிறது.

Related Stories: