ஊக்குவிப்பு திட்டம் ஒப்புக்கு அறிவித்ததா? ரூ.1.68 லட்சம் செலவு செய்தால்தான் ரூ.50,000 எல்டிசி பலன் கிடைக்கும்: பொருளாதாரத்தை மேம்படுத்த உதவாது: நிபுணர்கள் பகீர் தகவல்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் சரிந்த பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடன், மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்பணம், விடுப்பு பயண சலுகைக்கு (எல்டிசி/ எல்டிஏ) பதிலாக, கேஷ் வவுச்சர் எனப்படும் ரொக்க பற்றுச்சீட்டு வழங்குவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதில், ரொக்க பற்றுச்சீட்டு திட்டத்தின்படி, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள், 12 சதவீதத்துக்கு அதிகமாக ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், எல்டிசி பலனைப் பெற விரும்பும் ஊழியர், ரொக்க பலனை பெற, அதை விட 3 மடங்கு அதிகம் செலவு செய்ய வேண்டிவரும் என தெரியவந்துள்ளது.

உதாரணமாக, பயணச்செலவாக ரூ.50,000 கோருவதற்கு தகுதியுடைய ஊழியராக இருந்தால், ரூ.1.5 லட்சத்துக்கு  பொருட்கள் வாங்க வேண்டும். ஜிஎஸ்டியில் பதிவு செய்த வர்த்தகரிடம் இருந்து, குறைந்த பட்சம் 12 சதவீதம் அல்லது அதற்கும் மேல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டி வரும். பொருட்கள் வாங்க குறைந்த பட்சம் 12 சதவீத  ஜிஎஸ்டி செலுத்துவதாக இருந்தால் கூட, ரூ.18,000 கூடுதலாக செலவிட வேண்டி வரும். அதாவது, ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.1,68,000 செலவு செய்தால்தான், ரூ.50,000 எல்டிசியை அந்த ஊழியரால் கோர முடியும் என பாரத ஸ்டேட் வங்கி  ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு போதும் பொருளாதார ஏற்றத்துக்கு போதுமான அளவு உதவாது என நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர்.

* ‘சுற்றுலா துறையை மறந்த பிரதமர்’

மத்திய அரசின் கேஷ் வவுச்சர் திட்டம் தேவையை அதிகரிக்கலாம். ஆனால், சுற்றுலா துறையை மீட்டெடுக்க இது உதவாது. இப்படி ஒரு துறை இருப்பதையே பிரதமர் மறந்து விட்டாரா? என இந்திய டிராவல் ஏஜென்ட் சங்க தலைவர் ஜோதி மயால் கூறியுள்ளார். வங்கதேச டிராவல் ஏஜென்ட் சங்க தலைவர் சோம்நாத் சவுத்ரி கூறுகையில், ‘‘கொல்கத்தாவில் மட்டும் ஊரடங்கால் சுற்றுலா போக்குவரத்து துறையில் 50,000 பேர் வரை வேலை இழந்துள்ளனர்’’ என்றார்.

Related Stories: