தஞ்சை, மன்னையில் கொள்முதல் நிறுத்தம் கண்டித்து சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தஞ்சை: தஞ்சை, மன்னார்குடியில் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை அருகே தென்னங்குடியில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில தினங்களாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இங்கு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் அங்கிருந்து குடோனுக்கு கொண்டு செல்லப்படாததால் மேற்கொண்டு நெல் கொள்முதல் செய்து இருப்பு வைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டது. மேலும் சாக்கு பற்றாக்குறையும் நிலவியது. இதனால் நிலைய அலுவலர்கள், நெல் கொள்முதலை நிறுத்தினர். இதனால் நெல்லுடன் கொள்முதல் நிலையத்தில் நாள் கணக்கில் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று திமுக ஒன்றிய செயலாளர் முரசொலி தலைமையில் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் உடனடியாக சாக்குகளை அனுப்பி நெல் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அடிச்சேரியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர்.

இந்த கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 1000 மூட்டைக்கு பதில்  600 மூட்டைகள் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில், வடுவூர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நாளொன்றுக்கு 1500 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு பேரவை தலைவர் சுவாமிநாதன், பொதுச்செயலாளர் அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான விவசாயிகள் நேற்று நெல் மணிகளை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டங்களால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: