எம்பி தேர்தலில் கதாநாயகனாக விளங்கிய திமுக தேர்தல் அறிக்கை சட்டசபை தேர்தலிலும் அதே குழு தேர்தல் அறிக்கை தயாரிக்கிறது: தமிழகம் முழுவதும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்களை சந்திக்கிறது

சென்னை: மக்களவை தேர்தலில் கதாநாயகனாக விளங்கிய திமுக தேர்தல் அறிக்கையை தயாரித்த அதே குழு சட்டசபை தேர்தலிலும் தேர்தல் அறிக்கையை தயார் செய்கிறது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல், 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலுக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த குழு தமிழகம் முழுவதும் சென்று விவசாயிகள், வர்த்தகர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்தது. சுமார் 2 மாத காலம் தமிழகம் முழுவதும் இந்த குழு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் தேவை என்ன?, அவர்களின் மனநிலை எவ்வாறு உள்ளது, என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்? மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், ஒவ்வொரு தொகுதியிலும் என்னென பிரச்னைகள் உள்ளன?, மாநிலத்தில் என்னென்ன பிரச்னை உள்ளது, மாணவர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அலசி அதற்கான தீர்வுகளுடன் தேர்தல் அறிக்கையை தயாரித்து வழங்கியது.

அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படும். தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்ட திருத்தங்கள் செய்யப்படும். வேளாண் துறைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி, பூரண மதுவிலக்கு, நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, 100 நாள் வேலை திட்ட நாட்கள் அதிகரிப்பு, லோக் ஆயுக்தா, மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள், காஞ்சியில் பட்டுப் பூங்கா, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் வருவாயில் 60 சதவீதம் மாநில மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் உள்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன. தேர்தல் அறிக்கையை பார்த்து மு.க.ஸ்டாலின் கதாநாயகன் போல திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினார். மக்களவை தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. அதே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவையே வர உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த குழுவில் மீண்டும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொது செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி, கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி, பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச உள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள், அரசு ஊழியர்களிடம் நேரடியாக சென்று தேவை மற்றும் கருத்துக்களை கேட்க உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொகுதியிலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் ஆராய உள்ளது. கடந்த முறை தமிழக மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றது போல வர உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் சிறப்பான தேர்தல் அறிக்கையை தயாரித்து பாராட்டு பெற அந்த குழு திட்டமிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச உள்ளது.

Related Stories: