தொழிலதிபர் வீட்டில் 250 சவரன் கொள்ளை வழக்கில் மொய்தீன் கூட்டாளி மும்பையில் சிக்கினார்: 170 சவரன் நகை தங்க கட்டியாக மீட்பு

சென்னை: தொழிலதிபர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி மொய்தீன் கூட்டாளியை மும்பையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 170 சவரன் நகை தங்க கட்டியாக பறிமுதல் செய்யப்பட்டது. தி.நகர் சாரதாம்பாள் தெருவை சேர்ந்தவர் நூரூல் யாகூப் (70). தொழிலதிபரான இவர், கொரோனா தொற்றால் தனது மனைவி ஹனிஷாவுடன் வீட்டிலேயே தனிமையில் இருந்தார். கடந்த 1ம் தேதி மாலை 8க்கும் மேற்பட்ட முகமூடி கும்பல் இவரது வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் அனைவரையும் கட்டி போட்டுவிட்டு பீரோவில் வைத்திருந்த 250 சவரன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம், செல்போன் மற்றும் காரை கொள்ளையடித்து கொண்டு தப்பியது.

இதுகுறித்த புகாரின்பேரல் பாண்டிபஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபர் நூரூல் யாகூப் சகோதரி மகன் மொய்தீன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அதிமுக 117வது வட்ட இளைஞர் எழுச்சி பாசறை பகுதி செயலாளர் ஆலன் (39) உட்பட 8 பேரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மொய்தீன் தனது கூட்டாளியுடன் மும்பைக்கு தப்பியது தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர். அங்கு மொய்தீன் கொள்ளையடித்த 250 சவரன் நகையை தங்க கட்டிகளாக மாற்றியது தெரியவந்தது.

தனிப்படை போலீசார் மொய்தீனை நெருங்கியபோது, தப்பினான். இதனால், அவனது கூட்டாளியை மட்டும் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 170 சவரன்  மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை வைத்து முக்கிய குற்றவாளி மொய்தீனை கைது செய்ய வேண்டும் என்பதால் அவரது பெயரை வெளியிடாமல் தனிப்படை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். தொடர்ந்து போலீசார் மும்பையில் முகாமிட்டு தலைமறைவாக உள்ள மொய்தீனை தேடி வருகின்றனர்.

Related Stories: