இமாச்சல் முதல்வருக்கு தொற்று உறுதி ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் பலி: பீதியை கிளப்பும் கொரோனா

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் பலியாகி உள்ளனர். இமாச்சல பிரதேச முதல்வருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பல தலைவர்கள் பாதிக்கப்படுவதால் அரசியல் களத்திலும் கொரோனா பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தீவிரம் பெரிய அளவில் குறைந்தபாடில்லை. தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 66,732 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 816 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் 2 மாநில அமைச்சர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

பீகார் மாநிலத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கதிஹர் மாவட்டம் பிரன்பூர் தொகுதி பாஜ எம்எல்ஏவுமான வினோத் குமாருக்கு (55) கடந்த ஜூன் 28ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையில் படிப்படியாக அவர் குணமடைந்து வந்த நிலையில் மூளையில் திடீர் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

இதனால் மேல்சிகிச்சைக்காக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதே போல், நாகலாந்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சி.எம். சாங்க், டைபாய்டு பாதிப்பால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாகூர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக நேற்று அவரது டிவிட்டரில் தகவல் வெளியிட்டார். அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

* துணை ஜனாதிபதிக்கு நெகட்டிவ்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு (71) கடந்த மாதம் 29ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் உடல் நலம் தேறிய அவருக்கு நேற்று மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெங்கையாவுக்கு கொரோனா நெகட்டிவ் வந்திருப்பதாக அவரது அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories: