ஊரடங்கால் வாடகை தர முடியாத விதவையை மரத்தில் கட்டிப்போட்டு அடித்து உதைத்த வீட்டு உரிமையாளர்

ஹமீர்பூர்: வீட்டு வாடகை தராததால் உத்தரபிரதேசத்தில் விதவை பெண்ணை மரத்தில் கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் வீட்டு வாடகை செலுத்த முடியாத விதவை பெண்ணை, வீட்டின் உரிமையாளர் ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்தார். மேலும், அந்த விதவை பெண்ணின் உடமைகள் உள்ளிட்டவற்றை வெளியில் தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஹமீர்பூர் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணான ஷோபா தேவியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர், பகீரத் பிரஜாபதி என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஷோபா தேவிக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை. பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார். அதனால், வீட்டின் வாடகையை சில மாதங்களாக செலுத்த முடியவில்லை.

இதனால், வீட்டின் உரிமையாளர் பகீரத் பிரஜாபதி, சில பெண்களுடன் சென்று ஷோபா தேவியை வீட்டை விட்டு வெளியே இழுத்துவந்து மரத்தில் கட்டினார்.

பின்னர், ஷோபா தேவியின் உடமைகள் அனைத்தும் வீட்டிற்கு வெளியே எடுத்து வீசப்பட்டன. அந்த பெண்ணையும் சரமாரியாக தாக்கி உள்ளார். தற்போது அந்த விதவை பெண் மீட்கப்பட்ட நிலையில், வீட்டின் உரிமையாளர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: