தோனி மகள் குறித்து மோசமான கருத்து : குஜராத்தில் பிளஸ் 2 மாணவன் கைது

கட்ச்,:-சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எதிராக சமூக ஊடகங்களில் மோசமான கருத்துக்களை தெரிவித்த மாணவனை குஜராத் மாவட்டம் கட்ச் மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. இதனால், விரக்தியடைந்த மாணவன், மகேந்திர சிங் தோனியின் ஐந்து வயது மகள் ஜீவா பற்றி மோசமான கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தோனியின் ராஞ்சியில் உள்ள வீட்டுக்கு போலீசார் பாதுகாப்பு போட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட நபர் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன். குஜராத் காவல்துறை இந்த மாணவனை கைது செய்து ராஞ்சி போலீசில் ஒப்படைத்தது. கைதான மாணவன், சமூக வலைதளத்தில் மகேந்திர சிங் தோனிக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவரது குழந்தைக்கு எதிராக மோசமான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அதையடுத்து அவர் மீது ராஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக மாணவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்’ என்றனர்.

முன்னதாக பிரபல நடிகை நக்மா, தோனிக்கு எதிராக விடுக்கப்பட்ட மிரட்டலை கண்டித்து, பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தும் வகையில், ‘நாட்டில் என்ன நடக்கிறது? ஒரு நாடாக நாம் எங்கு நிற்கிறோம். தோனியின் 5 வயது மகளை அச்சுறுத்தியது மிகவும் வெட்கக்கேடானது’ என்று சமூக வலைதளம் மூலம் தனது கண்டனங்களை தெரிவித்தார்.

Related Stories: