உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் பாலியல் புகாரில் சிக்கியவருக்கு 'சீட்'டா ?: கேள்வி கேட்ட பெண் தொண்டர் மீது தாக்குதல்!!

லக்னோ : உத்தரப் பிரதேச காங்கிரசில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாலியல் புகாரில் சிக்கிய நபருக்கு சீட் கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் நிர்வாகி சக தொண்டர்களால் தாக்கப்பட்டார்.  உ.பி.யில் தியோரியா தொகுதி பாஜக எம்எல்ஏ காலமானதால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  அம்மாநிலத்தில் மொத்தம் 7 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநில காங்கிரஸ் கட்சியில் சீட் ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.  தியோரியாவில் நேற்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், இங்கு அக்கட்சி சார்பில் முகுந்த் பாஸ்கர் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

அப்போது, பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக கூறி, தாராதேவி என்ற பெண் தொண்டர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த கட்சியினரால் அவர் தாக்கப்பட்டார். பிறகு அவரை சிலர் அங்கிருந்து மீட்டனர். இது தொடர்பான செல்போன் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து போலீஸில் தாராதேவி புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், தாக்குதலுக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர சிங், துணைத் தலைவர் அஜய் சிங் மற்றும் இருவர் காரணம் என கூறியுள்ளார். அவர்கள் தன்னை தரக்குறைவாக திட்டியதாகவும் மானபங்கம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தாராதேவி கூறும்போது, “பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான நபருக்கு கட்சி சீட் கொடுத்துள்ளது. நான் சச்சின் நாயக்கிடம் எனது கருத்தை முன்வைத்தேன். நீங்கள் தவறான மனிதருக்கு டிக்கெட் கொடுத்து உள்ளீர்கள். இது சமூகத்தில் கட்சியின் பிம்பத்தை கெடுத்துவிடும். அதனால் சரியான நபருக்கு சீட் கொடுங்கள் என்று வலியுறுத்தினேன். அப்போது அங்கிருந்த சிலர் என்னை தாக்கினர். என் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories: