எளாவூர் சோதனைச்சாவடியில் காரில் கடத்திய 1 டன் செம்மரக்கட்டை பறிமுதல்: ஆந்திரா டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி உள்ளது. இந்த சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒரிசா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்  இருந்து ஏராளமான கனரக வாகனங்கள் மூலமாக காய்கறிகள், ஆட்டோ மொபைல்ஸ் உதிரிபாகங்கள் ஏற்றி செல்கின்றன.  இந்நிலையில், சில நாட்களாக ஆந்திராவிலிருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா  கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில்  சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் மற்றும் போலீசார் எளாவூர் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர்.  அப்போது, ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி தமிழ்நாடு பதிவு கொண்ட சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அதனை மடக்கியபோது அங்கிருந்து அந்த கார் தப்பியது.

பின்னர் போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்று சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் விரட்டி சென்று அந்த காரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரின் உள்ளே பார்த்தபோது ஒரு டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருந்தது. விசாரணையில் கார் டிரைவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ராவான் பப்பாய்   என்பது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: