காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இடியுடன் 6 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  இதையடுத்து தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தற்போது வெப்பச்சலனம் நீடித்து வரும் நிலையில் 9ம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்தம் வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. இதையடுத்து, பஞ்சப்பட்டியில் 90  மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் கிழக்குவங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்ெபற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

 இதன் காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன்  கூடிய மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கேரளாவில் இன்று 7 மாவட்டங்களுக்கு  மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்:  கேரளாவில்  இன்று முதல் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு,  கோழிக்கோடு, கண்ணூர், மற்றும் காசர்கோடு  ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த  மழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த 7 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மீனவர்கள்  கடலுக்கு செல்ல தடை  விதிக்கப்பட்டுள்ளது.  கனமழை வரும் 14ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: