மீன் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது: கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம்

வேளச்சேரி: சென்னை பெரும்பாக்கம், எழில் நகர், 41வது பிளாக்கை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவரது மனைவி சவுந்தர்யா. இருவரும் மீன் கடையில் வேலை செய்து வந்தனர். கடந்த 18ம்தேதி இரவு கலைவாணன் தான் குடியிருக்கும் மூன்றாவது மாடியின் வீட்டு வாசலில் குடிபோதையில் படுத்து தூங்கியுள்ளார். இரவு 11.50 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி சவுந்தர்யா வெளியே வந்து பார்த்தபோது அம்மி கல்லை தலையில் போட்டு கலைவாணன் கொலை செய்யபட்டு இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். பின்னர் சம்பவம் குறித்த பெரும்பாக்கம் காவல்நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கலைவாணன் மனைவி சவுந்தர்யா பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது கணவருக்கு ஆகாத நபர்கள் அதே மாடியில் இருந்த அம்மி கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கலைவாணன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் மூன்று மாதத்திற்கு முன் கலைவாணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சரளா கலைவாணனை அசிங்கமாக பேச, பதிலுக்கு சரளாவை அவர் அசிங்கமாக பேசியதும் தெரியவந்தது. எனவே, போலீசார் சந்தேகத்தின் பேரில் சரளா, அவரது மகன் வசந்த் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கலைவாணி, தமிழ், அருண் உள்பட 5 பேரை தேடி சென்றனர். அப்போது, அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. எனவே, போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் மு.வசந்த் (21), அவரது தாய் சரளா (56), அதே பகுதியை சேர்ந்த செ.கலைவாணி (30), ச.தமிழரசன் (30), ப.அருண் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

ஆனால், வசந்த் மற்றும் அருண் ஆகியோர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினர். அப்போது கீழே விழுந்து இருவருக்கும் கை உடைந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மாவு கட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் 5 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சில மாதங்களுக்கு முன் நாங்கள் கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக கலைவாணன் போலீசிடம் காட்டிக் கொடுத்ததால் எங்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து கலைவாணனுக்கும் எங்களுக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாக தெரிவித்தனர். மேலும் வசந்த் மீது 4 வழக்குகளும், கலைவாணி மீது ஒரு கொலை வழக்கு, 6 போதைப் பொருள் வழக்கு என 7 வழக்குகள் உள்ளன. அருண் மீது ஒரு போதைப் பொருள் வழக்கு உள்ளது தெரிய வந்தது. பிறகு 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மீன் வியாபாரி கொலை வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது: கஞ்சா விற்றதை காட்டிக் கொடுத்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: