தென்காசி ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி சுரங்க நடைபாதை பயன்பாட்டுக்கு வருமா?... பயணிகள் எதிர்பார்ப்பு

தென்காசி: தென்காசி ரயில் நிலையம், மாவட்டத்தில் அதிகமான ரயில்கள் மற்றும் பயணிகள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையமாக உள்ளது. இதன் தென்புறம் கலெக்டர் அலுவலகம், சார் ஆட்சியர், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், சார்பதிவாளர், பொதுப்பணித்துறை அலுவலகம், மகளிர் மேல்நிலைப்பள்ளி, காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், பழைய பேருந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. வடபுறம் புதிய பேருந்து நிலையம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மாவட்ட கல்வி அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒழுங்குமுறை விற்பனை கூடம், மாவட்ட நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், தனியார் பள்ளிகள், மாவட்ட பதிவாளர் அலுவலகம், இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன.

ரயில் நிலையத்திற்கு தென்புறம், வடபுறமுள்ள அலுவலகங்களை இணைப்பதற்கு ரயில்வே மேம்பாலம் உறுதுணையாக உள்ளது. நடந்து செல்லும் மக்கள் பொதுமக்கள் பாலத்தின் அடியில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். தற்போது ரயில் நிலையத்தை சுற்றி 1300 மீட்டர் நீளத்திற்கு 5 அடி உயரத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைந்து விட்டதால் தாலுகா  அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பணிகளை முடித்துவிட்டு வடபுறமுள்ள அலுவலகங்களுக்கு செல்ல அணுகு சாலை வழியாக பாலத்தின் மீதேறி சுமார் 2 கிமீ நடந்துதான் செல்ல வேண்டும். பாலத்தில் பாதசாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்படாததால் விபத்து அபாய சூழலும் உள்ளது. இதுபோன்ற சிரமத்தை குறைப்பதற்காக ரூ.2 கோடி செலவில் 50மீ நீளத்திற்கு 6மீ அகலம் மற்றும் 3மீ மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட சுரங்க நடைபாதையானது,

பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடப்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் சுரங்க நடைபாதையை நகராட்சி வசம் ஒப்படைத்து விட்டனர். அங்கு மின்வசதி, மழை காலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டார் வசதி செய்து கொடுக்கப்பட்டும் பூட்டியே கிடக்கிறது. தற்போது வரை பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து சென்று விடுவதால் சிரமமாக தெரியவில்லை. ஆனால் இன்னும் சில தினங்களில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நிறைவடைந்து விட்டால் அதன் பிறகு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே சுரங்க நடைபாதையில் சிசிடிவி காமிரா வசதி ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.

மாற்று திட்டம்

இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்க நடைபாதையானது இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்கின்ற வகையில் மாற்றி வடிவமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கைகளை ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள வேண்டும். அதாவது தற்போது உள்ள படிகளுக்கு பதிலாக சுரங்கப்பாதையின் தென்புறத்தில் ரயில் நிலைய விநாயகர் கோயில் முன்பிருந்து துவக்கி சுரங்கப்பாதை வழியாக வடபுறத்தில் எம்கேவிகே மெட்ரிக் பள்ளி வழியாக வெளியேறும் வகையில் வடிவமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்கின்ற வகையில் வடிவமைக்கும் போது பாதுகாப்பு பிரச்னை குறையும். போக்குவரத்து அதிகமாக இருந்தால் சமூக விரோதிகளும் சமூக விரோத செயல்களும் தடுக்கப்படும். இத்திட்டத்திற்கு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என்று கூறப்படுகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை பிரச்னையை தீர்த்துவைக்க மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூடப்பட்டது ஏன்?

ரயில்வே சுரங்கப்பாதையில் நகராட்சி சார்பில் மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்ட திறக்கப்பட்ட நிலையில், சமூகவிரோதிகள் மின்விளக்கை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் இரவு நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்பட்டது. இதையடுத்தே சுரங்கப்பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: