கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத கரூர் வடக்கு பசுபதிபாளையம் மின் மயானம்

* 10 வருடமாக போராடும் மக்கள்

* ரூ.50 லட்சம் வீண் என குற்றச்சாட்டு

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் வடக்குத்தெருவில் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்தும் நவீன எரிவாயு தகனமேடை (மின் மயானம்) செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது. இதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் வடக்குத்தெருவில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனமேடை (மின் மயானம்) அமைக்கும் பணிக்கான பூமி பூஜை 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி அன்று நடைபெற்றது. தொடர்ந்து பணிகள் நடைபெற்று, தனியார் அமைப்புகள் இதனை நிர்வகிக்கும் வகையில், ஒரு சில ஆண்டுகளிலேயே கட்டி முடிக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்காலத்தில் இந்த மின்மயானம் செயல்பாட்டுக்கு வரும் வகையில் திறப்பு விழா நடத்தப்பட்டது. ஆனாலும் பல்வேறு காரணங்களால் இதுநாள் வரை மின்மயானம் செயல்படாமல் உள்ளது. பசுபதிபாளையம், தாந்தோணிமலை, சுங்ககேட், காந்திகிராமம் பகுதியினர் இதனை பயன்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டம் பல்வேறு காரணங்களால் செயல்பாடின்றி உள்ளது. ஆரம்பத்தில் பசுபதிபாளையத்துக்கும், வடக்குத்தெருவுக்கும் இடையே கரூர் திண்டுக்கல், திருச்சி தண்டவாளப் பாதை குறுக்கிட்டது. அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் பொதுமக்கள் எளிதில் மின் மயானத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது என்பன போன்ற பல்வேறு காரணங்களாலும் இந்த மின் மயானம் செயல்படாமல் உள்ளது என கூறப்பட்டது. தற்போது பசுபதிபாளையம் வடக்குத் தெரு இடையே கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு எளிதான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. தண்டவாள பாதை குறுக்கீடு பிரசனையும் முடிவுக்கு வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் இந்த மின் மயானம் கட்டப்பட்டு செயல்பாடு இன்றி உள்ளதால், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் இவை மாறி விட்டது. மின் மயானத்துக்கான பிரதான கேட்டுகள் உடைந்து திறந்த நிலையில் உள்ளதால்,

பகல் மற்றும் இரவு நேரங்களில் குடிமகன்கள் சரக்கு அடிப்பது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதால் இந்த மயானம் உள்ள பகுதியில் பொதுமக்கள் செல்லவே அஞ்சி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் வடக்குத்தெரு பகுதியில் இருந்து மின் மயானம் செல்லும் பாதையை சுற்றிலும் முட்புதர்கள் ஆக்கிரமித்துள்ளதால் சாதாரணமாக பகலில் கூட இந்த பகுதிக்கு எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரத்தில் கரூர் அரசு காலனி செல்லும் சாலையில் பாலம்மாள்புரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்மயானம் தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் இதுநாள் வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அனைத்து தரப்பினர்களும் பாலம்மாள்புரம் மின்மயானத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி பசுபதிபாளையம் வடக்குத்தெருவில் கட்டப்பட்ட இந்த மின் மயானம் போதிய பராமரிப்பு மற்றும் அரசியல் பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டும் செயல்பாடின்றி உள்ளது. எனவே அரசியல் பிரச்னை போன்ற எந்த பிரச்னைகள் இருந்தாலும் அதனை மறந்து, களைந்து, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மின் மயானத்தை, தனியார் அமைப்புகளின் பங்களிப்பு உதவியுடன் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கரூர் நகராட்சி ஆணையர் சுதா: பசுபதிபாளையம் வடக்குத்தெருவில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை பயன்பாட்டில் இல்லை என்ற பிரச்னை எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனா போன்ற பல்வேறு பிரச்னைகள் தற்போது உள்ளதால் அதில் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். விரைவில், வடக்குத்தெருவில் உள்ள அந்த எரிவாயு தகனமேடையை செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்படும்.

இது குறித்து மக்கள் கருத்து...

பசுபதிபாளையம் வடக்குத் தெருவை சேர்ந்த சிவசுப்ரமணியன்: பசுபதிபாளையம், வடக்குத்தெரு, காந்திகிராமம் போன்ற பகுதிகளை சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் பயன்பாட்டுக்கு என கொண்டு வரப்பட்ட இந்த மின் மயானம் இதுநாள் வரை செயல்படாமல் உள்ளது. இதனால், இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பாலம்மாள்புரம் பகுதிக்குத்தான் சென்று வருகின்றனர். எனவே இந்த மின் மயானத்தை திரும்பவும் புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது.

பொதுநல ஆர்வலரும், முன்னாள் திமுக கவுன்சிலருமான நாராயணன்: ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்து, பூமி பூஜையும் நடத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும் சமயத்தில் பல்வேறு பிரச்னைகளை முன் வைத்து இந்த மின்மயானம் இதுநாள் வரை செயல்படாமல் உள்ளது என்பதே வேதனையான ஒன்று. அனைத்து தரப்பினர்களும் பயன்படுத்தும் நோக்கத்தில்தான் மின் மயான திட்டம் கொண்டு வரப்பட்டது. வேறு பகுதியில் உள்ள மின் மயானம் தனியார் அமைப்பு உதவியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே ரூ. 50 லட்சம் செலவில் கட்டப்பட்டு அனைத்து உபகரணங்களும் உள்ள இந்த மின்மயானத்தை உடனடியாக சீரமைத்து, புதுப்பித்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் நல்லது.

Related Stories: