புவனகிரி அருகே தலித் ஊராட்சி மன்ற தலைவருக்கே சாதிய கொடுமை.. தாழ்த்தப்பட்ட பெண் தலைவர் தரையில் அமர வைத்து அவமரியாதை!!

புவனகிரி,:புவனகிரி அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் அமர வைத்த ஊராட்சி துணை தலைவர், செயலாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தெற்கு திட்டை ஊராட்சி. இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி பொறுப்பு வகித்து வருகிறார். துணைத் தலைவராக மோகன்ராஜ் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் தரையில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் இன்று ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். புவனகிரி காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.விசாரணை முடிவில் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகிய இருவர் மீதும் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் எழுதி பெறப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், பதவி ஏற்ற நாளில் இருந்து தன்னை கீழே தான் அமர வைப்பதாகவும் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றவிடாமல் துணைத்தலைவர் ஏற்றியதாகவும் தெரிவித்தார்.இதற்கிடையே ஊராட்சி செயலர் பொறுப்பு வகித்து வந்த சிந்துஜாவை சஸ்பெண்ட் செய்து ஊராட்சி வளர்ச்சித்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: