பாலியல் பலாத்காரம் செய்து வாயில் மின்சாரம் பாய்ச்சி சிறுமி கொலையானது எப்படி?: குற்றவாளி விடுதலையை கண்டித்து தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் அடைத்து போராட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, மூக்கு, வாயில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட சம்பவத்தில்  குற்றவாளி விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சலூன்கடைகளை அடைத்து நேற்று  போராட்டம் நடத்தினர். சிறுமி கொலையான சம்பவம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே குரும்பபட்டியை சேர்ந்தவர் முடி திருத்தும் தொழிலாளி. மனைவி கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 12  வயதான மகள் இருந்தார். கடந்த 2019, ஏப். 16ம் தேதி தம்பதி வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். தம்பதியினர்  மாலை வீடு திரும்பினர். அப்போது உடலில் ரத்தக்காயங்களுடன், வாய்க்குள் மின் வயர் திணித்து, மின்சாரம் ஏற்றிய நிலையில் சிறுமி மயங்கி  கிடந்தார். பெற்றோர் அலறியடித்தபடி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சிறுமி இறந்து வெகு  நேரமாகி விட்டது என தெரிவித்தனர்.

விசாரணையில், பாலியல் பலாத்காரம் செய்தபிறகு, மின்சாரம் செலுத்தி சிறுமி கொல்லப்பட்டது தெரிந்தது. துடித்துப் போன சிறுமியின் பெற்றோர்,  உறவினர்கள் திண்டுக்கல் - வடமதுரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தந்தை அளித்த புகாரில் வடமதுரை போலீசார்  வழக்குப்பதிந்து விசாரித்தனர்.  விசாரணையில், சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் கிருபானந்தன், சிறுமிக்கு ஆபாச படங்களை காட்டி தொந்தரவு செய்ததும், வீட்டில் தனியாக  இருந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததுடன், வெளியில் சொல்லி விடலாம் எனக்கருதி, மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததையும்  தெரியவந்தது. அப்போது அவருக்கு வயது 17 முடிந்து 18 வயது துவங்கி இருந்தது. இதையடுத்து கிருபானந்தன் சேலம் சிறுவர் கூர்நோக்கு  இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் கடந்த 29ம் தேதி, நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளிக்கையில்,  ‘போதிய ஆதாரங்கள் இல்லை’ எனக்கூறி கிருபானந்தனை விடுதலை செய்தார். இந்த தீர்ப்பால், பெற்றோர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்  நலச்சங்கம் என பல தரப்பினரும் கொதிப்படைத்தனர்.

 இதையடுத்து, இந்த வழக்கில் சிறுமிக்கு நீதி கிடைக்கும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்து நேற்று மாவட்ட அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தினர்.அதன்படி, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம், இளைஞர் குழு,  பொதுமக்கள் மற்றும் சிறுமியின்  உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல்  மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூடி கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

 அப்போது, திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, கரூர் எம்.பி. ஜோதிமணி, ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. அர.சக்கரபாணி ஆகியோர், சிறுமியின்  உறவினர்களுடன் சேர்ந்து கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து மனு அளித்தனர். இதேபோல், கோவை மாவட்டத்தில் 2000 கடைகள், ஈரோடு மாவட்டத்தில் 2800 கடைகள், திருப்பூர் மாவட்டத்தில் 2000, நெல்லையில் 3000,  தூத்துக்குடியில் 2000 மற்றும் சென்னை, திருவள்ளூர் என தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சலூன் கடைகளை அடைத்து போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

எப்படி செத்தா என் புள்ள...?:

சிறுமி இறந்தது குறித்து தாயார் கூறும்போது, ‘‘எங்க மகளுக்கு ஒரு சின்ன காயம் பட்டால் கூட துடித்துப் போவோம். ஆனால் உடம்பெல்லாம் காயம்,  உடல் பகுதியை கடித்து ரத்தம் கட்டி போய், ஆடை முழுவதும் ரத்தத்தோடு கிடந்த என் மகளை பார்த்தபோது நான் செத்தே போய்ட்டேன். என்  பொண்ணு எவ்வளவு துடித்து போயிருப்பாள்?  வாயிலும், மூக்கிலும் வயரை செருகி கரண்ட் ஷாக் வைத்திருந்தது தெரிந்து எனக்கு மயக்கம் வந்து  விட்டது.

போலீஸ் விசாரணையில் எதிர்வீட்டு கிருபானந்தனைக் கைது செஞ்சாங்க... அவனுடன் 3 பேர் சேர்ந்து இப்படி செய்ததாக வாக்குமூலம் கொடுத்தும்,  அவனை மட்டும்தான் கைது செய்தார்கள். இப்போது அவனையும் விட்டு விட்டார்கள். என் புள்ள எப்படித்தான் செத்தா? யார்தான் கொன்னது? பொம்பள  பிள்ளைய பெத்தா இதுதான் கதியா?’’ என்று கண்ணீருடன் கூறினார்

3 பேர் கும்பல் பலாத்காரம்

அனைத்திந்திய மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வனஜா கூறுகையில், ‘‘இவ்வழக்கில் 17 வயதுச் சிறுவனை குற்றவாளி என்று கைது செய்தனர்.  ஆனால் சம்பவத்தில் ஈடுபட்டது 3 பேர் கொண்ட கும்பல். போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. தற்போது அந்த ஒரு நபரும் விடுதலை  செய்யப்பட்டுள்ளார்.  எனவே, நாங்கள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்’’ என்றார்.

Related Stories: