ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சொத்து அட்டை: நாளை தொடங்கி வைக்கிறார் மோடி

புதுடெல்லி: ‘ஸ்வமித்வா’ திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பிரதமர் மோடி நாளை வெளியிட்டு, கிராம மக்களுக்கு வழங்க உள்ளார்.தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான கடந்த ஏப்ரல் 24ம் தேதி, ‘ஸ்வமித்வா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் கீழ்,  கிராமப்புறங்களில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு, ‘சொத்து அட்டை’ வழங்கப்படும்.  அவர்தான் அந்த சொத்தின் உரிமையாளர் என அங்கீகரிக்கும்  வகையில் வழங்கப்படும் இந்த சொத்து அட்டைகளை பயன்படுத்தி, கிராம மக்கள் வங்கிகளில் கடன் வசதிகளை பெறலாம்.

 இந்நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி இந்த சொத்து அட்டைகளை அறிமுகப்படுத்தி, அவற்றை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார்.  இந்நிகழ்ச்சி நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்க உள்ளது. இதில், 6 மாநிலங்களில் 763 கிராமங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சொத்து  அட்டை வழங்கப்பட உள்ளது. அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் லிங்க் மூலம் சொத்து அட்டை டிஜிட்டல் முறையில் அனுப்பி வைக்கப்படும்.  அதன் பின், மாநில அரசுகள் அட்டை வடிவில் வழங்கும். கிராமப்புற இந்தியாவில் சீர்த்திருத்தம் செய்யக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை  இது என பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், லட்சக்கணக்கான கிராமப்புற சொத்துதாரர்கள் பலன் அடைவார்கள் என்றும்  கூறியுள்ளது. இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் சிலருடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார்.

படிப்படியாக விரிவாக்கம்

இந்தியாவில் மொத்தம் 6 லட்சத்து 62 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. தற்போது, முதல் கட்டமாக 763 கிராமங்களில், சொத்து அட்டை திட்டம் இன்று  முதல் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக 6.62 லட்சம் கிராமங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு  இலக்கு நிர்ணயித்துள்ளது.

கிராமங்கள் வழியாக வரும் பினாமி சொத்து சட்டம்?

பிரதமர் மோடி கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ‘சொத்து புத்தகம்’ திட்டத்தை அமல்படுத்த தீவிரமாக  முயன்றார். பினாமி பெயர்களில் குவிக்கப்பட்டுள்ள சொத்துகளை கண்டுபிடிப்பதற்காக இத்திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி, மக்கள் தங்கள் பெயரில்  உள்ள சொத்து விவரங்களை தாமாகவே முன்வந்து, அரசிடம் தெரிவித்து அதற்கான பட்டியல் அடங்கிய புத்தகத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் இது,  ஆதாருடன் இணைக்கப்படும். இதன் மூலம், ஒருவருக்கு எத்தனை சொத்துகள் இருக்கின்றன என்ற கணக்கு, அரசிடம் தௌிவாக இடம் பெறும்.  

இவ்வாறு கணக்கு காட்டப்படாத சொத்துகள், பினாமி சொத்துகளாக கருதப்பட்டு அரசு அவற்றை கையகப்படுத்தும். இதற்கு பல்வேறு மட்டத்தில் கடும்  எதிர்ப்பு கிளம்பியதால், அத்திட்டத்தை மோடி அப்போது கிடப்பில் போட்டார். தற்போது, இத்திட்டம் கிராமங்களில் இருந்து ‘சொத்து அட்டை’ என்ற  பெயரில் வேறு பெயரில் நுழைவதாக சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories: