ஒரே வீடியோ பதிவால் உணவுப் பொருட்கள் விற்று தீர்ந்தது ‘பாபா கா தாபா’ தாத்தா செம ஹேப்பி

புதுடெல்லி: டெல்லி மால்வியா நகரில் 80 வயது கந்தா பிரசாத் என்பவரும், அவரது மனைவி பாமினி தேவியும், ‘பாபா கா தாபா’ என்ற பெயரில்  சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வருகின்றனர். கொரோனா முடக்கம், பலரது வாழ்க்கையை முடக்கிப் போட்டது போலவே இந்த தம்பதியின்  வாழ்க்கையிலும் பேரிடியை தந்தது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் வராததால், வியாபாரமின்றி வாழ்வாதாரமே  கேள்விக்குறியாகி இருப்பதாக கவுரவ் என்ற வாடிக்கையாளரிடம் கந்தா பிரசாத் தாத்தா கண்ணீர் வடித்தார். முதியவரின் வார்த்தைகளில் கலங்கிப் போன அந்த வாடிக்கையாளர், அவர் படும் துயரத்தை வீடியோ பதிவு செய்து,  சமூக வலைதளங்களில்  பதிவேற்றினார். இதனை நடிகர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களின் பக்கங்களில் ஷேர் செய்ய, உடனடியாக அந்த  தம்பதியினர் வைரல் ஆனார்கள். இதனால், அவர்களின் கடையில் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்து உணவு பொருட்களை வாங்கி  சென்றதால், அனைத்தும் விற்று தீர்ந்தது.

எந்நேரமும் கடையில் கூட்டம் களை கட்டுகிறது. இதனால், இந்த முதிய தம்பதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டெல்லி வாசிகளின் இந்த  செயலுக்கு அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலும் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனாவால் வியாபாரமே இல்லாமல் இருந்த நிலையில் தற்போது,  இந்தியாவே தங்களுடன் துணை இருப்பதாக கந்தா பிரசாத் தாத்தா கண்ணீர் மல்க கூறினார். மேலும், தங்களைப் போலவே தவித்து வரும்  லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் அனைவரும், தங்களைப் போலவே மகிழ்ச்சியாக மாற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.ஆன்லைனிலும் சேர்ப்பு: ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் நிறுவனம் கூட, தனது ஓட்டல்கள் பட்டியலில், ‘பாபா கா தாபா’வை சேர்த்துள்ளது. இதன்  மூலம், ஆன்லைனிலும் இனி ஆர்டர்கள் குவியும் என்றும், முதிய தம்பதிக்கு தங்களால் ஆன உதவி என்றும் அந்நிறுவனம் கூறி உள்ளது.

Related Stories: