மேட்டூர் அணை திறந்து 4 மாதமாகியும் தண்ணீர் நிரம்பாத குளங்களால் நீர்மட்டம் குறைவு-100 நாள் திட்டத்தில் தூர்வார கோரிக்கை

வலங்கைமான் : டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டு நூறு நாட்களை கடந்த நிலையில் நிரம்பாத குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, குடவாசல், கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், திருவாரூர், கொரடாச்சேரி உள்ளிட்ட 10 ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான குளங்கள் உள்ளன. மேலும் அறநிலையத் துறைக்கு சொந்தமானதும் மற்றும் கிராம கோயில்களுக்கு சொந்தமானதும் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை பொறியியல் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் நூறுநாள் வேலை திட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடும் விதமாகவும், விவசாயிகளுக்கு நாட்டு மீன் வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்திடும் விதமாகவும் நூறு சதவீத மான்யத்தில் வேளாண்மை பொறியில்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அதிக அளவில் பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சிறிய மற்றும் பெரிய அளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாகவும், கர்நாடகா விடமிருந்து உரிய தண்ணீரை தமிழக அரசு கேட்டுப்பெறாததாலும் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு கால தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டதால் அத்த ண்ணீரை கொண்டு சாகுபடி பணிகள் மட்டுமே மேற்கொள்ள முடிந்தது.

பாசனத்திற்கு ஏற்ற வகையில் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததாலும், போதிய தண்ணீர் இல்லாததாலும் வறண்டு கிடந்த குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்ப வாய்ப்பில்லாமல் போனது.

இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையும், 16ம் தேதி கல்லணையும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு 4 மாதங்களை கடந்த நிலையில் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் ஊராட்சிக்கு சொந்தமான குளத்தில் முன்னதாக உபரிநீர் செறிவூட்டும் விதமாக ஒன்றுக்கு மேற்பட்ட கட்டமைப்புகளை பல ஆயிரம் செலவு செய்து ஏற்படுத்தப்படுத்தும் அரசு சில ஆயிரங்களை செலவு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வருவதற்கான வழித்தடங்களை அடையாளம் கண்டு உடனே நூறுநாள் வேலை திட்டத்தின் மூலமோ அல்லது சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்தோ குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வரும் வழித்தடங்களை தூர்வார வேண்டும். நீர்நிலைகளை காலதாதமின்றி நிரப்பினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். எனவே மேலும் கால தாமதம் செய்யாமல் நீர்நிலைகளை நிரப்ப அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: