‘ப’ வைட்டமின் மழையில் நனையும் அதிகாரிகள்: தஞ்சை மண்டல பத்திரப்பதிவு ஆபீஸ்களில் தலைவிரித்தாடும் லஞ்சம்

* காணாமல் போனா சர்பரைஸ் ரெய்டு

* லஞ்ச ஒழிப்பு துறையும் கூட்டு

* தனி ராஜ்ஜியம் நடத்தும் எழுத்தர்

* புகார் கொடுத்தால் ஆடியோ ஆதாரம் கேட்கும் போலீஸ்

தஞ்சை: தமிழகத்தில் பதிவுத்துறை 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 50 மாவட்ட பதிவு அலுவலகங்கள் பிரித்து, அதன் கீழ் 571 சார்பதிவு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. ஒவ்வொரு மாவட்ட பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழ் சுமார் 10 முதல் 20 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம், பிளாட் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் பத்திரங்கள் அந்தந்த சார்பதிவாளர் எல்லைக்குள் இருக்க வேண்டும். அப்போது தான் பத்திரம் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. இதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் எங்கு வேண்டுமானாலும் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை என மூன்று பதிவுத்துறை மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, இதன் கீழ் சுமார் 10க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. சார் பதிவாளர் அலுவலகங்களில், பத்திரம் பதிவு செய்வதற்கு, வீடு, மனை, நிலம், தனியார் மற்றும் வங்கிகளுக்கு எம்ஒடி பதிவு செய்பவர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்தினாலும், நிலமதிப்பிற்கேற்ப பதிவு கட்டணமும், பத்திர கட்டணம் வசூலிக்கப்படும்.

இதில், பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர பதிவு செய்பவர்கள், வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள், நிலத்தின் தன்மை பொறுத்து, அவர்களிடம் லஞ்சமாக பணம் வசூலிக்கப்பட்டு வருவது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இது போன்ற அவலத்தால், தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலகத்திலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

பட்டுக்கோட்டையில் மாவட்ட பதிவாளர் அலுவலகமும், பத்திரப்பதிவுக்குசார் பதிவாளர் அலுவலகம் அலகு 1, சார் பதிவாளர் அலுவலகம் அலகு 2 என இரண்டு அலுவலங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரம் பதிவு செய்வதற்கு, வீடு, மனை, நிலம் வாங்குபவர்கள் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்தினாலும், நிலமதிப்பிற்கேற்ப லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் சுமார் 20 முதல் 30 பத்திர பதிவுகள் நடைபெறுகின்றது. பதிவு செய்ய வருபவர்கள், பத்திர கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும். ஆனால் அலுவலகத்திலுள்ள சார்பதிவாளர் முதல் அலுவலர்கள் வரை கவனிக்க வேண்டியிருப்பதால், இரண்டு கட்டணத்துடன், கூடுதலாக லஞ்சம் வசூலிக்கின்றனர்.

தினந்தோறும் நடைபெறும் பத்திர பதிவுகளை வைத்து, வாங்கப்படும் லஞ்ச பணத்தை, அவர்கள் சொல்லும் இடத்திலோ அல்லது மாலையில் பணி முடிந்து செல்லும் போதோ, கொடுத்து விடுகின்றனர். பதிவுத்துறைக்கு பணிக்கு வருபவர்கள், லட்சக்கணக்கான பணத்தை லஞ்சமாக கொடுத்து விட்டு பணிக்கு வருகிறார்கள். அப்படி கொடுத்த பணத்தை வசூலிக்க வேண்டியிருப்பதால் இப்படி மக்களிடமிருந்து பணத்தை கறப்பது தொடர்ந்து அரங்ேகறி வருகிறது. தினமும் ஆயிரத்திலிருந்து லட்சம் வரை வசூல் ஆவதால், இந்த துறைக்கு போட்டிகள் அதிகமாக இருக்கும். சில சார்பதிவாளர்கள், எந்த மாவட்டத்தில் வருவாய் அதிகமாக இருக்கிறதோ, அங்கு பணியாற்ற கூடுதலாக லஞ்சம் கொடுத்து பணி வாங்கி விடுவார்கள். பத்திர பதிவுக்கு லஞ்சமாக பணம் வாங்கி தராவிட்டால், எழுத்தர் தரப்பிலிருந்து செல்லும் பத்திரங்களுக்கு பல்வேறு குறைகள் உள்ளது என தள்ளுபடி செய்து விடுவார்கள்.

கோபத்துடன் பேசுவார்களின் பத்திர பதிவை, பதிவுத்துறை அலுவலர்கள், தாமதப்படுத்துவார்கள். காலையில் வந்தவர்களை மாலை வரை இழுத்தடித்தும், அதிகமாககோபப்படுபவர்களை நாள் கணக்கிலும் அலைகழிக்கப்பதும் தொடர்ந்து வருகிறது. இதற்கு பயந்து, பதிவு செய்ய வருபவர்கள், வேலை முடிந்தால் போதும் என நினைத்து கேட்டதை கொடுத்து விட்டு, பதிவு செய்து விட்டு சென்று விடுவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசாரால், மாவட்டத்திலுள்ள சார்பதிவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது. இதுகுறித்து லஞ்சஒழிப்புதுறை போலீசாரிடம், புகாரளித்தாலும், கண்டுகொள்வதில்லை. அவர்கள், லஞ்சம் வாங்குபவர்களின் பேச்சினை செல்போனில் பதிவு செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதால்,

நமக்கு ஏன் பிரச்னை என்று, லஞ்சமாக கேட்கும் பணத்தை கொடுத்து விட்டு, பத்திர பதிவு செய்து விட்டு செல்கின்றனர். ₹12 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினை, பதிவு செய்ய வருபவர்களிடம் நாங்கள், 7 சதவீதம் ஸ்டாம்ப் கட்டணம், 4 சதவீதம் கட்டணம், ஸ்டாம்ப் மற்றும் பொது கட்டணம், சிடி, எஸ்டி, தனிப்பிரிதி, கணினி பதிவு கட்டணம், எழுத்தர், சர்வீஸ் கட்டணங்கள், அலுவலக செலவு மற்றும் இடஆய்வு என சுமார் ₹1,65,000 வசூல் செய்கிறார்கள். ஆனால் இதற்கான கட்டணம் ₹1,35,000 தான் செலவாகும். மீதமுள்ள ₹30,000 அதிகாரிக்கு வழங்க வேண்டும். பதிவு அலுவலகங்களில் வசூலிக்கப்படும் லஞ்ச பணம், உயரதிகாரிகள் வரை செல்வதால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பதிவுத்துறையில் லஞ்சம் வழங்குவது என்பது எழுதப்படாத சட்டமாகும். ஒவ்வொரு பதிவுத்துறை அலுவலக வாயிலிலுள்ள பத்திர எழுத்தர் தான் ராஜியம் செய்வார்கள்.

லஞ்ச ஒழிப்பை தடுக்கதான் தனித்துறை உள்ளது. ஆனால், அந்த துறையின் நம்பிக்கையை பெற நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதைதான். என் பணத்தை கொள்ளையடிக்கிறாங்கனு புகார் கொடுக்க போனா இன்னும் இவங்க எங்கள் சுரண்டி எடுக்கிறாங்க. எப்படி உனக்கு இந்த சொத்து வாங்க பணம் வந்தது. எங்களுக்கு இவ்வளவு கொடு. இல்லை என்றால் ரெய்டு வருவேன் என மிரட்டுகின்றனர். லஞ்ச ஒழிப்பு துறையின் பணியே சர்பரைஸ் ரெய்டு, புகாரின்பேரில் ரெய்டு அடிக்கடி சென்று லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதே. ஆனால், தஞ்சையில் மண்டலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு உயரதிகாரிகள் முதல் கீழ் நிலை காவலர்கள் வரை ‘ப’ வைட்டமின் மழையில் நனைக்கிறார்கள்.

இதனால், யாரையும் அவர்கள் பகைத்து கொள்ள விரும்பவில்லை. வருமானம் வந்தால் போதும் என்று விட்டு விடுகிறார்கள். தஞ்சை மண்டல பத்திரப்பதிவுத்துறையில் அதிக வருமானம் ஈட்டி தரும் மண்டலமாக உள்ளது. நிறைய இடங்களில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய இடங்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள். அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளையும் கவனித்து விடுகிறார்கள். இதனால், ஒவ்வொரு லட்சக்கணக்கில் சம்பாதித்து செழிப்பாக வளம் வருகின்றனர். இதற்கு முக்கியமாக ஒரு சில அதிகாரிகள் பல ஆண்டுகளாக அதே இடத்தில் உள்ளதுதான். இவ்வாறு அவர்கள் கூறினார்.

உயரதிகாரிகள் வரை லஞ்சம்

பத்திர எழுத்தர் ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவுதுறையை பொறுத்தவரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பெறுகின்ற லஞ்சம் உயரதிகாரிகள் வரை செல்கின்றது. இதனால் யாரையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. பதிவுதுறையில் லஞ்சம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது என்றார்.

Related Stories: