தப்லீக் ஜமாத் வழக்கு; பேச்சு,கருத்துச் சுதந்திர உரிமைதான் சமீபகாலமாக அதிகமாக மீறப்படுகிறது: மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடெல்லி,: சமீப காலமாக அனைத்து விவகாரங்களிலும் கருத்து சுதந்திரம் என்பது முற்றிலும் தவறாக பயன்படுத்தப்படும் உரிமையாக மாறிவிட்டது என உச்ச நீதிமன்றம் நடந்த விசாரனையின் போது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் வெளிநாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் சுமார் 8ஆயிரம் பேர் பங்கேற்று இருக்கலாம் என தகவல் வெளியாகியது. மேலும் 15 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊர் திரும்பியவர்களால் தான் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து செய்தியும் வெளியாகியது. இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக செய்தி வெளியானதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,மனுதாரர் தரப்பில் குறிப்பிட்டது போன்று தவறாக எந்தஒரு செய்திகளும் ஊடங்களில் வெளியாகவில்லை என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட பிரமாணப் பத்திரத்தின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, சம்பவம் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, அதில் எந்த ஒரு முழுமையான தகவல்களும் கிடையாது. நீதிமன்றத்தை உங்களது இஷ்டப்படி பயன்படுத்தி கையாள விரும்ப வேண்டாம். அதனை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம். இதில் கொரோனா பரவலை ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புப்படுத்தி எந்த ஒரு செய்திகளும் வெளியாகவில்லை என எப்படி மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது எங்களுக்கு புரியவில்லை. எதையும் புரிதல் மற்றும் மனிதாபத்தோடு அணுகு வேண்டும் என சரமாரி கேள்வியெழுப்பினர். இதையடுத்து நடந்தவைக்கு வருத்தம் தெரிவித்த கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா அடுத்த விசாரணையின் போது அனைத்தையும் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்வதாக நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.

இதையடுத்து உத்தரவில், இந்த வழக்கு தொடர்பாக முந்தைய காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க மத்திய அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, அதற்கான சட்டங்கள் என்ன என்பது குறித்து ஒரு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதேப்போன்று சமீப காலங்களில் கருத்து சுதந்திரம் என்பது முற்றிலும் எல்லை மீறி வருகிறது. மேலும் அது தவறாக பயன்படுத்தப்படும் உரிமையாகவும் மாறியுள்ளது என்று தான் கருத முடியும் என கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Related Stories: