காவேரிப்பாக்கம் அருகே தரமற்ற நிலையில் தரைப்பாலம் அமைத்த சில மாதங்களிலே வெளியே தெரிந்த கான்கிரீட் கம்பிகள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அடுத் பொன்னப்பந்தாங்கல் அருகே தரைப்பாலம் அமைத்த சில மாதங்களிலே வெளியே தெரிந்த கான்கிரீட் கம்பிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பந்தாங்கல் அருகே உள்ள பன்னியூர் கூட்ரோடு வழியாக வாலாஜா, பனப்பாக்கம் மற்றும் சோளிங்கர் பகுதிகளுக்கு ஏராளமான வாகன ஓட்டிகள் செல்கின்றனர். விபத்துக்களை தடுக்க காவல்துறை சார்பில் மிளிரும் விளக்கு, மற்றும் பேரிகார்டுகள் வைக்கப்பட்டது.

மேலும், பன்னியூர் கூட்ரோட்டிலிருந்து வாலாஜா வரை செல்லும் நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து, கடந்தாண்டு இந்த சாலை அகலப்படுத்தி, தரைப்பாலங்கள் புதிதாக கட்டப்பட்டன. இந்நிலையில் பாலம் அமைத்து சில மாதங்களிலேயே தற்போது, பாலத்தின் மேல்பகுதியில் சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்துபோய் விட்டது. இதனால் உள்ளே இருந்த இரும்பு கம்பிகள் எலும்புக்கூடாக வெளியே தெரிகிறது. இதில் பல கம்பிகள் வெளியே தள்ளியபடி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அத்துடன் இவ்வழியாக வரும் வாகனங்களின் டயர் கம்பியில் குத்தி சேதமடைகிறது.

சில மாதங்களிேலயே பாலத்தின் சிமென்ட் தளம் பெயர்ந்துபோய் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு தரமற்ற பாலம் அமைத்தவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: