ஜவுளி, வெள்ளி, இயந்திர உற்பத்தி தேக்கம்; ஏற்றுமதி ஆர்டர் ரத்தானதால் முடங்கிப்போன தொழில்கள்: பல கோடி ரூபாய் நஷ்டம்; உற்பத்தியாளர்கள் வேதனை

சேலம்: ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்தானதால் சேலம் சரகத்தில் ஜவுளி, வெள்ளி, இயந்திர உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தொழில் முனைவோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க போக்குவரத்து முடங்கியது. தற்போதுதான் ஊரடங்கு தளர்வுகளால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்றுமதி பெரும் பாதிப்புகளை கண்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், ஆட்டோமொபைல் பொருட்கள், இயந்திரங்கள், பயோ கெமிக்கல்ஸ், மருந்து பொருட்கள், தானியங்கள், இரும்பு மற்றும் ஸ்டீல், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் போன்றவை முதல் 10 இடங்களில் ஏற்றுமதியில் உள்ளது.

இதில் இயந்திரங்கள், தானியங்கள் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் இருந்தும், வெள்ளி ஆபரணங்கள், ஜவுளி மற்றும் இரும்பு பொருட்கள் ஸ்டீல் சிட்டி என்று அழைக்கப்படும் சேலத்தில் இருந்தும், ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மெஷின் சிட்டி என்று அழைக்கப்படும் ஓசூரில் இருந்தும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போதைய கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தொழில் முனைவோர் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சேலம் மண்டல தொழிற்கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: சேலம் மண்டலத்தை பொறுத்தவரை கோவைக்கு அடுத்து சேலத்தில் ஜவுளிகள், ஜவ்வரிசி, வெள்ளிப்பொருட்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மோட்டார் வாகன உபகரணங்கள், பூக்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு பாசுமதி அரிசி, பருப்பு, தேயிலை போன்றவை அனுப்பப்படுகிறது. இது மட்டுமன்றி ரஷ்யாவிற்கு மருந்து பொருட்களும், ஆஸ்திரேலியாவிற்கு மளிகை பொருட்களும்அனுப்பப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக கொரோனா பாதிப்புகளால் விமானம், கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும்  பொருட்கள் அப்படியே முடங்கியது. கொரோனாவுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பல ஆர்டர்களை, அயல்நாட்டு நிறுவனங்கள் ரத்து செய்து விட்டது. இந்தியாவை பொறுத்தவரை 50சதவீத ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தேங்கியுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் மற்றும் ஒப்புதல்களை பெறுவதிலும் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து சில மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலும் தொழில்கள் முடங்கி, கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்று தெரியவில்லை. எனவே அரசு, பாதிக்கப்பட்டவர்களுடன் ஆலோசித்து, மீள்வதற்கான சலுகைகளை அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து சரியும் ஏற்றுமதி

‘‘இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி பெருமளவில் சரிந்துள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.  இந்தியாவின் ஏற்றுமதி 60.3 சதவீதம் என்ற அளவிலும், இறக்குமதி 58.7சதவீதம் என்ற அளவிலும் சரிந்துள்ளதாக புள்ளி விபரங்கள்  தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் வணிக ஏற்றுமதி 34.6சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது ஏப்ரலில் 28.7சதவீதமாக சரிந்தது என்று ஆய்வுகள்  தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் வணிக நடவடிக்கைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த மாதங்களுக்கும் இந்த வீழ்ச்சி நீடிக்கும். அதன் தாக்கம் சேலம் மண்டலத்திலும் இருக்கும்,’’ என்பதும் ஆய்வாளர்களின் தகவலாக உள்ளது.

Related Stories: