திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அடல் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து 3 விபத்துகள்: செல்பி மோகத்தால் விபரீதம்

மணாலி: அடல் சுரங்கப்பாதை திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் வாகன ஓட்டிகளின் அலட்சியம் காரணமாக 3 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் மணாலியில் இருந்து லேவை இணைக்கும் வகையில் உலகிலேயே மிக நீளமான அடல் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதை கடந்த 3ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை காரணமாக, மணாலி-லே இடையிலான தூரம் 46 கிமீ குறைந்துள்ளது.

இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்டு 24 மணி நேரத்தில் வாகன ஓட்டிகளின் அலட்சியம் மற்றும் சுற்றுலா பயணிகளின் பொறுப்பற்ற செயல்களின் காரணமாக, அடுத்தடுத்து 3 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. சுரங்கப் பாதையின் இடையில் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு செல்பி எடுப்பது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்வது போன்ற காரணங்களால் இந்த விபத்துகள் நடந்துள்ளன. எல்லை சாலைகள் அமைப்பின் தலைமை பொறியாளர் புருஷோத்தமன், அடல் சுரங்க பாதையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும்படி,

கடந்த ஜூலை 3ம் தேதி இமாச்சல பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கும், கடந்த 3ம் தேதி உள்ளூர் நிர்வாகத்துக்கும் கடிதம் எழுதி கேட்டுக் கொண்டுள்ளார். அடல் சுரங்கப் பாதையில் விபத்துக்கள் ஏற்படுவது குறித்து எல்லை சாலைகள் அமைப்பு கவலை தெரிவித்ததை தொடர்ந்து, 48 மணி நேரத்துக்குப் பிறகு சுரங்கப் பாதையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Related Stories: