சபரிமலை மண்டலகால பூஜை தினமும் 5,000 பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல காலத்தின்போது தினமும் 5,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி ேகாயில் நடை திறக்கப்படுகிறது. இதில் மண்டல காலத்துக்கு முன்னோடியாக பக்தர்களை சோதனை அடிப்படையில் அனுமதிக்க தேவசம்போர்டு தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் உடனடியாக பக்தர்களை அனுமதிக்க இயலாது என்று தற்போது தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது: நவம்பர் 16 முதல் தொடங்கவுள்ள மண்டலகால மகரவிளக்கு பூஜைகளின்போது பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு திருப்பதிபோல ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.முன்பதிவு செய்யும்போது கண்டிப்பாக, 48 மணி நேரத்திற்கு முன்பு நடத்திய கொரோனா நெகட்டிவ் சான்ழிதழ் இணைக்க வேண்டும். மேலும் கேரள அரசின் ‘கோவிட் 19 கேரளா ஜாக்கிரதா’ இணையதளத்தில் அனைத்து பக்தர்களும் பதிவுசெய்ய வேண்டும். நிலக்கலில் கட்டணம் வசூலித்து, அனைத்து பக்தர்களுக்கும் ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்படும்.

பம்பை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். எருமேலி, புல்மேடு உட்பட அனைத்து பாரம்பரிய பாதைகளும் மூடப்படும். பம்பை ஆற்றில் குளிக்க அனுமதி இல்லை. பம்பை, சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க முடியாது. மண்டல கால தொடக்கத்தில் ஒருநாளில் 1,000 பேரும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுவர். அடுத்த கட்டத்தில் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆனால் 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதியில்லை. 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தவிர உடல் பரிசோதனை அறிக்கை சான்றிழையும் இணைக்க வேண்டும். மாத பூஜை நாட்களை மேலும் 5 நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக தந்திரியிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: