நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்... மும்பை காவல்துறையை அவதூறு செய்த அரசியல்வாதிகள், ஊடகங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் : சிவசேனா பாய்ச்சல்!!

மும்பை:நடிகர்  சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்த எய்ம்ஸ் அறிக்கையில், அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளதாக தெரிவித்த நிலையில், பாலிவுட்  மற்றும் வடமாநில அரசியல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதுகுறித்து ஆளும்  சிவசேனா கட்சியின் பத்திரிகையில், ‘மும்பை காவல்துறையை அவதூறு செய்த அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும். இது,  சுஷாந்தின் மரணம் தொடர்பாக மகாராஷ்டிராவின் உருவத்தை கெடுக்க  பயன்படுத்தப்பட்டது. இந்த சதியில் ஈடுபட்டவர்கள் மீது மகாராஷ்டிரா அரசு  அவதூறு வழக்குபதிவு செய்ய வேண்டும்.

மகாராஷ்டிரா அரசை  இழிவுபடுத்தியவர்கள், எய்ம்ஸ் அறிக்கையை தள்ளுபடி செய்வார்களா?. சுஷாந்தின்  துரதிர்ஷ்டவசமான மரணம் நடந்து 110 நாட்கள் ஆகியும், சிபிஐ விசாரணையின்  முன்னேற்றம் என்ன? எங்களை கேள்வி கேட்டவர்கள் சிபிஐ விசாரணையை ஏன் கேள்வி  கேட்கவில்லை. கடந்த 40 முதல் 45 நாட்களில் சிபிஐ என்ன செய்தது. சுஷாந்த்  வழக்கில் மும்பையை பாகிஸ்தான் என்று வர்ணித்த நடிகையும் (கங்கனா ரனாவத்)  இப்போது காணவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து,  சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘சுஷாந்த் வழக்கின்  தொடக்கத்திலிருந்தே மகாராஷ்டிரா அரசையும், மும்பை போலீசாரையும் அவதூறு  செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. சிபிஐ விசாரணை இப்போது நம்பப்படவில்லை  என்றால், நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. எய்ம்ஸ் தடயவியல் மருத்துவ  வாரியத்தின் தலைவர் டாக்டர் சுதிர் குப்தாவுடன், சிவசேனாவுக்கு எந்த  தொடர்பும் இல்லை’ என்றார்.

Related Stories: