தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எம்.பி ரவீந்திரநாத் மனு மீது அக்.16ல் ஐகோர்ட்டில் தீர்ப்பு

சென்னை: தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு மீது வரும் 16ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் பலர் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார். பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளிவைக்கவில்லை’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ரவீந்திரநாத்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்ந்த மிலானி சார்பில் வக்கீல் வி.அருண் ஆஜராகி வழக்கை தள்ளுபடி செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது வரும் 16ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளதாக உத்தரவிட்டார்.

Related Stories: