பாரதிய ஜனதா மேலிட உத்தரவால் எடப்பாடி, ஓபிஎஸ் சமரசம்; வழிகாட்டு குழுவில் இடம்பெற போட்டா போட்டி: அதிமுக முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டு குழு அறிவிப்பு குறித்த பிரச்னையில் பாரதிய ஜனதா மேலிட உத்தரவால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழிகாட்டு குழு அமைக்க முதல்வர் எடப்பாடி ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது வழிகாட்டு குழுவில் இடம்பெற மூத்த நிர்வாகிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இன்று அல்லது நாளை வழிகாட்டு குழு அறிவிக்கப்பட்டு, அறிவித்தபடி நாளை அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 300 பேரில் 90 சதவீதம் பேர், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முதல்வர் எடப்பாடி பேசும்போது, அதிமுக கட்சிக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்று பேசினார். ஓ.பன்னீர்செல்வமும், கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. சசிகலா கும்பலுக்கு எதிராகத்தான் கட்சியில் இருந்து வெளியில் வந்தேன். சசிகலா வெளியேறியதும் அதிமுக ஆட்சியை காப்பாற்றியது நான்தான் என்றார். இதனால் செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி - ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என்று திட்டவட்டமாக கூறினார்.

இதனால் செயற்குழுவில் எந்த முடிவில் எடுக்கப்படவில்லை. ஆனாலும், அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று செயற்குழு முடிவில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். முதல்வர் எடப்பாடியையும் அமைச்சர்கள் அவ்வப்போது சந்தித்து மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டு குழு அமைப்பதில் உறுதியாக இருந்தார். பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாததால் ஓபிஎஸ் திடீரென கடந்த 2ம் தேதி தனது சொந்த மாவட்டமான தேனிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கடந்த 3 நாட்களாக தனது பண்ணை வீட்டில் தங்கி இருந்து அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடியை 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். ஆனாலும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் குழப்பமாக நிலையே ஏற்பட்டது. இந்நிலையில்தான், மத்திய பாரதிய ஜனதா மேலிட தலைவர் ஒருவர் இந்த விஷயத்தில் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர் நேற்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக, அதிமுக உட்கட்சி பிரச்னை குறித்து பேசியுள்ளார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் சொல்வதுபடி முதலில் 11 பேர் வழிகாட்டு குழுவை அமையுங்கள். அந்த குழுதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும். ஓபிஎஸ், முதல்வர் வேட்பாளருக்கு ஆசைப்படவில்லை. அதேநேரம் வழிகாட்டு குழு அமைப்பதில் உறுதியாக உள்ளார். இரண்டு தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் அதிக வாக்குகளை பெற முடியும் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முதல்வர் எடப்பாடியும் தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து வழிகாட்டு குழு அமைக்க சம்மதம் தெரிவித்தார். ஆனாலும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வழிகாட்டு குழு அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை முதல்வர் சமாதானப்படுத்தினார். இந்த தகவல் தேனி மாவட்டத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்த துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரை நேற்று மதியம் தலைமை செயலகத்துக்கு ஓபிஎஸ் அனுப்பி வைத்தார். அவர்களும் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் கூறுவதுபோல் 11 பேர் வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த தகவலை கே.பி.முனுசாமி, தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து அவரும் சொந்த மாவட்டத்தில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை புறப்பட்டு வந்தார்.

சென்னைக்கு இரவு 9 மணிக்கு வந்த ஓபிஎஸ், இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இது ஒருபுறம் இருக்க முதல்வர் எடப்பாடியும் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கும் பணியில் இன்று ஈடுபட்டுள்ளார். அதன்படி வழிகாட்டு குழுவில் 5 பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், 6 பேர் எடப்பாடி ஆதரவாளர்களும் இடம்பெற உள்ளனர். எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம்(அல்லது தளவாய்சுந்தரம்), மற்றும் நத்தம் விஸ்வநாதன், அன்வர்ராஜா, தங்கமணி, வேலுமணி ஆகிய 6 பேர் இடம் பெறுகின்றனர். அதேபோன்று ஓ.பி.எஸ். தரப்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜெ.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் அல்லது எம்எல்ஏ மாணிக்கம், வைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன், தேனி கணேசன் அல்லது விருதுநகர் பாலகங்கா ஆகிய 5 பேர் இடம் பெறுகிறார்கள்.

தற்போது எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அமைக்கப்பட உள்ள 11 பேர் வழிகாட்டு குழுவில் இடம்பெற அதிமுக மூத்த நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கவுண்டர் சமுதாயத்தினர் 2 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் தம்பித்துரை, செங்கோட்டையன் இடம்பெற வில்லை. இதனால் அவர்கள் இருவரும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், அமைச்சர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அமைச்சர்கள் அல்லாத மூத்த தலைவர்களுக்கு வழிகாட்டு குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்று சில மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தன்னுடைய தரப்பில் 6 பேர் கொண்ட குழுவை தயார் செய்த எடப்பாடி பழனிச்சாமி, அந்தப் பட்டியலை அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, உதயகுமார் ஆகியோரிடம் வழங்கியுள்ளார்.

அவர்கள் 4 பேரும், பட்டியலுடன் சென்று ஓ.பன்னீர்செல்வத்தை காலை 11.20 மணிக்கு சந்தித்தனர். அந்தப் பட்டியலை இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். பட்டியல் தற்போது இறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் திட்டமிட்டபடி இன்று இரவுக்குள் அல்லது நாளை காலை 11 பேர் வழிகாட்டு குழு அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. பின்னர் இந்த வழிகாட்டு குழு ஆலோசனை நடத்தி நாளையே அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Related Stories: