மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்ட அரசு பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

சோளிங்கர்: சோளிங்கர் அரசு மகளிர் பள்ளியில் கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ஆய்வு மேற்கொண்டார். சோளிங்கரில் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு உள்ளது. மேலும், இங்கு எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டு மாதிரிப் பள்ளியாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  மாதிரிப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? மேலும் ஏதேனும் வசதிகள் தேவையா? என்பது குறித்து தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மாதிரிப்பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார். அப்போது, வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா, ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் அருள்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், தாசில்தார் ரேவதி, தலைமை ஆசிரியர் மூர்த்தி, செயல்அலுவலர் செண்பகராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி ராஜா, தூய்மை ஆய்வாளர் வடிவேல், ஆர்ஐ. யுவராஜ், விஏஓ ஷானு மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

நெமிலி: அதேபோல், பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு மாதிரிப்பள்ளியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கு கலெக்டர் திவ்யதர்ஷினி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டார். மாதிரி பள்ளிக்காக ₹20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: